Monday, October 25, 2010



சம்சாரி ரமணர்...

சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வாங்கிய ரமண மணத்தை இப்போதுதான் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நூலாசிரியர் ரா.கணபதி. அதில் முதல் அத்தியாயத்தையே அதிர்ச்சி அத்தியாயமாகத்தான் ஆரம்பிக்கிறார் ரா.கணபதி.

குஞ்சு ஸ்வாமிக்கு அதிசயமாகவும், அந்த அதிசயத்திலேயே அதிர்ச்சியாகவும்கூட இருந்தது என ஆரம்பிக்கிறது அத்தியாயம். குஞ்சு ஸ்வாமிகள் ரமண மகரிஷியின் அணுக்கத் தொண்டர்களுள் ஒருவர்.

மலையாள அன்பர் ஒருவர் ஸ்ரீரமணரின் சரிதத்தை அவர் தாய்மொழியில் எழுதி, அதைப் பதிப்பாளருக்கு அனுப்பும் முன்பாக ரமணருக்கு அந்தக் கைப்பிரதியை அனுப்பியிருந்தார். அதை ரமணரே மேற்பார்த்து பதிப்பிக்க அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் வேறு வைத்திருந்தார்.

மலையாளத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்த ரமண மகரிஷி, அந்தக் கைப்பிரதியைப் படித்துப் பார்த்து அங்கங்கே முற்றுப் புள்ளி, முக்கால் புள்ளி, அரைப் புள்ளி, கால் புள்ளி என அவை சரிவர இல்லாத இடங்களிலெல்லாம் சரியாக்கித் திருத்தியிருந்தார். எழுத்துப் பிழைகளையும் திருத்தியிருந்தார். ஆனால், மூல விஷயத்தில் மட்டும் கை வைக்கவே இல்லை. அதில் தப்பும் தவறுமாக ஏராள தகவல்கள் இருந்தன. அவற்றில் ஒரு மாற்றம் கூடச் செய்யவில்லை.

வேலை முடிந்தவுடன் கையெழுத்துப் பிரதியைக் குஞ்சு ஸ்வாமியிடம் தந்து, அதைப் பதிப்பாளருக்கு தபாலில் சேர்ப்பிக்கும்படி கூறினார். குஞ்சு ஸ்வாமிகளின் தாய்மொழி மலையாளம். தமது தாய்மொழியில் தமது மாதாவும பிதாவும் குருவுமான பகவானின் திவ்ய சரித்திரம் வருகிறதே என்பதில் குதூகலம் அடைந்து, அஞ்சல் செய்வதற்கு முன்பாக அந்தக் கைப்பிரதியைப் படிக்க ஆரம்பித்தார்.

நாம் ஆரம்பத்தில் கண்ட அதிசய அதிர்ச்சி, மேற்கண்ட கைப்பிரதியைப் படிக்க ஆரம்பித்ததில்தான். அந்தச் சரித்திரத்தில் வெளியாகியிருந்த தகவல்கள் அத்தனையுமே அபத்தமும் அனர்த்தமுமாக இருந்தன. உதாரணத்துக்கு ஒன்றேயொன்று போதும். ரமணர் குடும்ப வாழ்வு நடத்திய பின்னரே துறவியானதாக அந்த நூலாசிரியர் எழுதியிருந்தார்.

இப்படிப்பட்ட ஓர் அபத்தப் புத்தகம் தமது பகவானைப் பற்றி வருவதா எனத் துணுக்குற்ற குஞ்சு ஸ்வாமிகளுக்கு இதை எப்படி பகவான் அங்கீகரித்தார் என எண்ணுகையில் அதிசயமும் அதிர்ச்சியும் ஒருசேர ஏற்பட்டது. பகவானிடம் சென்றவர், ‘பகவானே, இதையா புஸ்தகம் போடுவது? விஷயமெல்லாம் ஒரே பொய்யாக இருக்கிறதே’ கலவரத்துடன் கேட்டார்.

ரமணரோ கேலியாகச் சிரித்தவாறே, ‘பெரிய வேதாந்தி, பொய் நிஜம் கண்டுண்டார்’ என அவரையே கேலி செய்ய, குஞ்சு ஸ்வாமியும் உடனே உண்மை வேதாந்தி போலவே அதைப் பதிப்பாளருக்கும் அனுப்பிவிட்டார்.

‘நிஜம்’ என்றால் ‘ஸத்யம்’ என்று தமிழில் கொள்கிற அர்த்தத்தில் ரமணர் கூறினார். ‘நிஜம்’ என்றால் ‘தனதேயான’ என்பதே நேர்ப்பொருள்.

வேதாந்திகளுக்கு, தனதேயான அந்த தான் என்னும் ஆத்மா ஒன்றுதான் ஸத்யம். மீதமெல்லாம், ஆத்மாவுக்கு அந்நியமாக மீதம் என்று ஒன்று இருப்பதுபோல எண்ணுவதெல்லாம் பொய்தான். இதை ஆத்ம-அநாத்ம விவேகம் என்பார்கள்.

பதிப்பாளருக்கு அந்தக் கைப்பிரதியை அனுப்பியபின்னர் குஞ்சு ஸ்வாமிகளுக்கு நிம்மதியே இல்லை. ‘உம்முடைய புஸ்தகம் திரும்பி வந்துவிட்டது, ஓய்’ என ரமணர், அச்சு வாகனம் ஏறாத அந்தக் கைப்பிரதியைப் பற்றிக் கூறியபோதுதான் குஞ்சு ஸ்வாமிகள் நிம்மதியானார்.

பதிப்பாளர்கள் சரித்திரத்தின் தகவல்கள் பொய்யாக இருப்பதைத் தெரிந்து அதைத் திருப்பி அனுப்பவில்லை. பதிப்பிக்க வசதி இல்லை என்பதாலேயே திருப்பி அனுப்பியிருந்தார்கள். இது அதைவிட கூடுதல் சுவாரஸ்மாக இருக்கிறதல்லவா.

-சைதை முரளி

Friday, May 21, 2010

லைலா தந்த கவிதை...

சமீபத்தில் அடித்த லைலா புயலால் சென்னை கத்திரி வெயிலில் இருந்து இரண்டு நாட்களுக்குத் தப்பித்தது ஒருபுறம். இன்னொரு புறம் அது ஏற்படுத்திச் சென்றிருக்கும் பாதிப்புகள் எத்தனையோ என்ற தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. சாம்பிளுக்கு எங்கள் ஏரியாவில் குட்டி மரக்கிளை ஒன்று - ஏற்கெனவே தன் தாயுடன் கோபித்துக்கொண்டிருக்குமோ என்னவோ... - எனக்குள் இருந்து இந்தக் கவிதை வரிகளை மீட்டெடுத்தது.



விண்ணை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த நான்,
மண்ணையும் பார்க்க ஆசைப்பட்டேன்.
முத்தமும் இட்டுவிட்டேன் மண்ணில்.
ஆனால் என்னைத்தான்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை
எவரும்.



மூச்சு முட்டுகிறது.
எவ்வளவு நேரம்தான்
முத்தமிட்டுக் கொண்டிருக்க முடியும்?
முத்தத்தில்தானே இருக்கிறாய்
என மெத்தனமாக இல்லாமல்,



மொத்தமாக
விடுதலை
தாருங்களேன்,
பேச்சுக்கு இல்லை.
என் மூச்சுக்கு...

- சைதை முரளி.



இடம் - சைதை குளக்கரை தெரு, காரணீஸ்வரர் கோயில் அருகில்.

Thursday, July 30, 2009




சாயி ஸ்மரணை

வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
பக்தர் உம்மை அழைக்கின்றோம்!
விருப்பம் ஈடேற வேண்டும்!
பக்தி பலமுற வேண்டும்!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

துக்கம் போக்க வாரும் சாயி!
ஆனந்தம் அளிக்க வாரும் சாயி!
சேய் உமை அழைத்தேன் சாயி!
தாய் மனதோடு இளகுவாய் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

கீர்த்தனம் சாயி, பூஜை சாயி!
வாழ்வும் சாயி, வளமும் சாயி!
ஆனந்தம் சாயி, செல்வம் சாயி!
அற்புதம் சாயி, அபயம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஷீர்டிவாசி எங்கள் சாயி!
பக்தரின் இனிய அன்பர் சாயி!
கருணைக் கடலே எங்கள் சாயி!
அருள் பார்வை பாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

கிழக்கும் சாயி, மேற்கும் சாயி!
வடக்கும் சாயி, தெற்கும் சாயி!
எத்திசையில் நீ இருந்தாலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

ஹிந்து சாயி, முஸ்லிம் சாயி!
ஜீவன் சாயி, யாத்திரை சாயி!
யேசு சாயி, குருநானக் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

தர்மம் சாயி! கர்மம் சாயி!
தியானம் சாயி! தானம் சாயி!
தூணிலும் சாயி, துரும்பிலும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

திருப்தி சாயி, முக்தி சாயி!
பூமி சாயி, ஆகாயம் சாயி!
சாந்தி சாயி, ஓம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

சத்யம் சாயி, சிவம் சாயி!
சுந்தரம் சாயி, ஈஸ்வரன் சாயி!
இரக்கம் சாயி, எளியவர் சாயி!
அன்பு சாயி, அமைதி சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!

சக்தி சாயி, பக்தி சாயி!
சிவன் சாயி, விஷ்ணு சாயி!
ப்ரம்மா சாயி, பஞ்சபூதம் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!
வாரும் சாயி, வாரும் சாயி!





ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம்

01. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம:
02. ஓம் சத்குரு சாயிநாதாய நம:
03. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:
04. ஓம் பரமகுரு சாயிநாதாய நம:
05. ஓம் தேவகுரு சாயிநாதாய நம:
06. ஓம் சாயி சிவசக்த்யை நம:
07. ஓம் சாயி சர்வ சக்திமானாய நம:
08. ஓம் சாயி சர்வ வ்யாபங்காய நம:
09. ஓம் சாயி சர்வ ஆத்மாய நம:
10. ஓம் சாயி அலக் நிரஞ்சனாய நம:
11. ஓம் சாயி சர்வ சாட்சியாய நம:
12. ஓம் சாயி அந்தர்யாமியாய நம:
13. ஓம் சாயி பரிபூரஜாத நம:
14. ஓம் சாயி ஆதிசக்தியை நம:
15. ஓம் சாயி அனாதி சக்த்யை நம:
16. ஓம் சாயி ராமாய நம:
17. ஓம் சாயி த்ரிலோகி நாதாய நம:
18. ஓம் சாயி த்ரைகால தர்ஷியாய நம:
19. ஓம் சாயி கோவிந்தாய நம:
20. ஓம் சாயி சச்சிதானந்த ஸ்வரூபாய நம:
21. ஓம் சாயி பக்த ரக்ஷகாய நம:
22. ஓம் சாயி பரமானந்த ஸ்வரூபாய நம:
23. ஓம் சாயி மஹா துர்காய நம:
24. ஓம் சாயி ஆகர்ஷண சக்தியாய நம:
25. ஓம் சாயி அஞ்ஞான விநாசகாய நம:
26. ஓம் சாயி யோகீஸ்வராய நம:
27. ஓம் சாயி புருஷோத்தம புருஷாய நம:
28. ஓம் சாயி சங்கராய நம:
29. ஓம் சாயி சுக ஸ்வரூபாய நம:
30. ஓம் சாயி கல்யாண ஸ்வரூபாய நம:
31. ஓம் சாயி ஜக ஆதாராய நம:
32. ஓம் சாயி ரகுநந்தனாய நம:
33. ஓம் சாயி தேவ ரக்ஷகாய நம:
34. ஓம் சாயி அசுர ஸம்ஹாரியாய நம:
35. ஓம் சாயி கர்மபல தாதாய நம:
36. ஓம் சாயி தத்தாத்ரேய நம:
37. ஓம் சாயி கர்த்தா புருஷாய நம:
38. ஓம் சாயி தீனபந்துவாய நம:
39. ஓம் சாயி பகத் பயஹாரிய நம:
40. ஓம் சாயி துக்க நிவாரணாய நம:
41. ஓம் சாயி அகால புருஷாய நம:
42. ஓம் சாயி ஆதி நாராயணாய நம:
43. ஓம் சாயி லீலாதாரியாய நம:
44. ஓம் சாயி ஜனஹித் காரியாய நம:
45. ஓம் சாயி சிவசம்புவாய நம:
46. ஓம் சாயி ஆபத்தி ஹரணாய நம:
47. ஓம் சாயி சரணாகத வத்ஸலாய நம:
48. ஓம் சாயி மாதவாய நம:
49. ஓம் சாயி ராகன்ஹாராய நம:
50. ஓம் சாயி ஜகத்காரணாய நம:
51. ஓம் சாயி சத்கதி தாதாய நம:
52. ஓம் சாயி மாகாளிகாயை நம:
53. ஓம் சாயி கருணாசிந்துவாய நம:
54. ஓம் சாயி சர்வேஸ்வராய நம:
55. ஓம் சாயி ஜகதீஸ்வராய நம:
56. ஓம் சாயி அகால சக்தியை நம:
57. ஓம் சாயி பதீத பாவனாய நம:
58. ஓம் சாயி விஸ்வநாதாய நம:
59. ஓம் சாயி வேத ஸ்வரூபாய நம:
60. ஓம் சாயி சுக தாதாய நம:
61. ஓம் சாயி ஹரிநாராயணாய நம:
62. ஓம் சாயி சத்ய ஸ்வரூபாய நம:
63. ஓம் சாயி சர்வ ஸாமர்ணாய நம:
64. ஓம் சாயி ஜோதி ஸ்வரூபாய நம:
65. ஓம் சாயி மஹாலக்ஷ்ம்யை நம:
66. ஓம் சாயி ஹரிகோவிந்தாய நம:
67. ஓம் சாயி சோஹம் தேவாய நம:
68. ஓம் சாயி ஓம்கார ஸ்வரூபாய நம:
69. ஓம் சாயி மஹா சரஸ்வத்யை நம:
70. ஓம் சாயி ஹரி விட்டலாய நம:
71. ஓம் சாயி வெங்கடேஸ்வராய நம:
72. ஓம் சாயி மாயா விநாசகாய நம:
73. ஓம் சாயி மோஹ விநாசகாய நம:
74. ஓம் சாயி விபித்தி பஞ்சநாத நம:
75. ஓம் சாயி பக்தி தாதாய நம:
76. ஓம் சாயி முக்தி தாதாய நம:
77. ஓம் சாயி ஞான தாதாய நம:
78. ஓம் சாயி கோபி வல்லபாய நம:
79. ஓம் சாயி பவதாரகாய நம:
80. ஓம் சாயி சர்வப்ரியாய நம:
81. ஓம் சாயி அபராத ஹர்தாத நம:
82. ஓம் சாயி பண்டரீநாராய நம:
83. ஓம் சாயி க்ருபா சாகராய நம:
84. ஓம் சாயி மங்கலகாரி தேவாய நம:
85. ஓம் சாயி அமங்கலஹாரி தேவாய நம:
86. ஓம் சாயி அம்ருத சிந்துவாய நம:
87. ஓம் சாயி சாந்தி தாதாய நம:
88. ஓம் சாயி சந்திரமௌலீஸ்வராய நம:
89. ஓம் சாயி ஜகத்ரூபாய நம:
90. ஓம் சாயி ஆத்ம ஜோதியாய நம:
91. ஓம் சாயி லக்ஷ்மிநாராயணாய நம:
92. ஓம் சாயி அபேத சக்தியாய நம:
93. ஓம் சாயி விஸ்வ ஆத்மாய நம:
94. ஓம் சாயி பரமாத்மாய நம:
95. ஓம் சாயி பக்தவத்சலாய நம:
96. ஓம் சாயி அக்னிரூபாய நம:
97. ஓம் சாயி காயத்ரியை நம:
98. ஓம் சாயி மஹா அம்பிகாயை நம:
99. ஓம் சாயி தர்மரக்ஷகாய நம:
100. ஓம் சாயி சித்தி தாதாய நம:
101. ஓம் சாயி ரித்தி::தாதாய நம:
102. ஓம் சாயி ஊர்ப்ரகாய நம:
103. ஓம் சாயி சாது ரக்ஷகாய நம:
104. ஓம் சாயி சிந்தா நாசகாய நம:
105. ஓம் சாயி ஆனந்த மூர்த்தாய நம:
106. ஓம் சாயி பாக்ய விதாதாய நம:
107. ஓம் சாயி ஹரிஹராய நம:
108. ஓம் சாயி பரப்ரம்மாய நம:

Wednesday, July 15, 2009

திருப்பதி திருமலை குறித்த எனது நூலான சுடர்விடும் சூப்பர் ஸ்டார் நூல் குறித்து, தமிழ் வெப்துனியாவில் வெளியான விமரிசனம் இங்கே உங்கள் பார்வைக்கு...



திருப்பதி திருமலை - சுடர் விடும் சூப்பர்ஸ்டார்

வெள்ளி, 12 அக்டோபர் 2007( 12:07 IST )




பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் 108 வைணவத் தலங்களில் மகத்துவம் மிக்க புண்ணியஸ்தலமான திருப்பதி திருமலை கோயில் உருவானது பற்றியும், எம்பெருமான் ஏழுமலையான் பற்றியும் விரிவான தகவல்களுடன் நூல் ஆசிரியர் சந்திரசேகர சர்மாவின் படைப்பாக வரம் பப்ளிகேஷன்ஸின் வெளியீடாக வந்துள்ள நூல் சுடர் விடும் சூப்பர்ஸ்டார்.

இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் திருப்பதி திருமலை பற்றிய முன்னுரையுடன் சுப்ரபாதம் பாடலை 'வேங்கடவா எழுந்தருள்வாய்' என அழகு தமிழில் பாடும் விதமாக கொடுத்துள்ளனர்.

திருப்பதி திருமலை தோன்றிய புராணக்கதையை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லிய விதம் சிறப்பு.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைப்பயணமாக மலையேறும் பக்தர்கள் எப்படி செல்ல வேண்டும், நடைப்பாதையில் பக்தர்களுக்கு உள்ள வசதிகள், நடைப்பயணம் தொடங்கும் முன் நீராட வேண்டிய தீர்த்தம், பிறகு வழிபட வேண்டிய பகவான், செல்லும் வழியில் தரிசிக்க வேண்டியவை, மண்டபம், கோபுரம், ஆலயம் என ஒவ்வொன்றையும் அடைந்து மேலேறி வந்தால் கோயில்... என நாம் படிக்கும்போதே நம் கண் முன் ஜொலிக்கிறது திருமலை.

அதன் பிறகு பாவங்கள் போக்கும் புண்ணிய தீர்த்தங்கள், தீர்த்தங்களில் நீராடும் முறை, தீர்த்தங்களின் வகைகள் பற்றியும் விரிவாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.

திருமலையில் அடிவைத்ததும் வெள்ளி வாசல் வழியே நுழைந்தால் விமான பிரதட்சிணம், தங்கக் கிணறு, தங்க விமான தரிசனம் என ஒவ்வொன்றையும் கடந்து வந்தால் ஏழுமலையான் சந்நதிக்குள் நுழையுமுன் கடந்து செல்ல வேண்டிய மூன்று அரங்கங்கள், அதன் பிறகு நமக்கு கிடைக்கும் ஏழுமலையான் தரிசனத்தை நாம் படிக்கும்போதே பெற்று விடுகிறோம்.

ஏழுமலையான் தரிசனம் முடிந்து வெளிவரும்போது மண்டபங்கள், கோயில்கள், சம்பங்கி பிரதட்சிணம், கிருஷ்ண தேவராயர் மண்டபம், திருமலை ராயர் மண்டபம், அயினா மஹால், துவஜஸ்தம்ப மண்டபம், ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில், ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி, ஸ்ரீ நரசிம்மசுவாமி சந்நிதி, ஸ்ரீ கருட சந்நிதி, ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் சந்நிதி என நாம் காண வேண்டிய, தரிசிக்க வேண்டிய அனைத்து சந்நிதி விவரங்களையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்.

திருப்பதி திருமலை ஏழுமலையானை நாம் தரிசிக்கும் முன் திருச்சானுரில் உள்ள பத்மாவதி தாயாரை தான் முதலில் தரிசிக்க வேண்டும் என்று அந்தக் கோயில் பற்றிய விவரங்களையும் ஆசிரியர் கொடுத்துள்ளார். பத்மாவதி தாயாரை தரிசித்த பிறகு திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்பதால் விசேஷ பலன் கிடைக்கும் என்றும் சொல்லியுள்ளார்.

திருச்சானுர் கோயிலில் பத்மாவதி தாயாருக்கு செய்யப்பட்டும் அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, தரிசனம், சேவை கட்டணங்கள் அனுமதிக்கப்படும் நபர்கள் பற்றிய விவரங்களையும் தந்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தீவிர பக்தர் அன்னமாச்சார்யா பற்றிய வாழ்க்கை வரலாற்றையும், அவர் பக்திப்பாடல்கள் இயற்றி அதன் மூலம் சேவை செய்த விவரங்களையும் விளக்கமாகத் தந்துள்ளார்.

திருப்பதி குடை, உண்டியல், லட்டு, புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி விரதம், ஏகாதசியின் சிறப்பு பற்றிய விவரங்களையும் தந்துள்ளார் ஆசிரியர்.

திருமலை திருப்பதியில் தங்குவதற்கு சிறப்பான பயணியர் மாளிகை, திருமலை மீது பக்தர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள், திருப்பதி பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுப்பது ஏன்? என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார்.

இறுதியில் திருப்பதி வழியெங்கும் சொல்லிக் கொண்டு போக ஸ்ரீ கோவிந்த நாமாவளி, எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய 'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...' பாடலில் நம்மை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சிப்படுத்தி, ஒரு புதிய அனுபவம் தந்து இப்புத்தகம் முடிகிறது.

மொத்தத்தில் திருப்பதி திருமலை செல்லும் பக்தர்கள் அவசியம் வாங்க வேண்டிய, படிக்க வேண்டிய, தெரிந்து கொள்ளவேண்டிய, பாதுகாக்க வேண்டிய சிறந்த புத்தகம்.

இவ்வளவு தகவல்களையும் தெளிவாகவும், படிக்கும் விதமாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்துள்ள ஆசிரியருக்கும், வெளியிட்ட பதிப்பகத்துக்கும் பாராட்டுக்கள்.

Thursday, June 19, 2008


குறையொன்றும் இல்லை


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா!
குறையொன்றும் இல்லை கோவிந்தா!


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா


குறையொன்றும் இல்லை கண்ணா!


குறையொன்றும் இல்லை கோவிந்தா!



கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா!


கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க


வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!


மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா!!



திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா! கண்ணா!!


திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா!!


உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்!


திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா!!


உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்!


என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா!


என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா!


குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா!


குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா!


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா!!



கலி நாளுக்கிரங்கிக் கல்லிலே இறங்கி


நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா!


கலி நாளுக்கிரங்கிக் கல்லிலே இறங்கி


நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா!


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


யாதும் மறுக்காத மலையப்பா!


யாதும் மறுக்காத மலையப்பா! உன்மார்பில்


ஏதும் தரநிற்கும் கருணைக் கடல் அன்னை


என்றும் இருந்திட ஏதுகுறை எனக்கே


என்றும் இருந்திட ஏதுகுறை எனக்கே


ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா!


ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா!


மணிவண்ணா! மலையப்பா! கோவிந்தா! கோவிந்தா!!


கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா! கோவிந்தா!!

Wednesday, January 16, 2008

என்ன பழக்கம்க இது?

சமீபத்தில் எழுத்தாளர் என். சொக்கன் அவர்கள் எழுதிய ’பத்து ரூபாய் நோட்டு‘ சிறுகதையைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அக்கதையின் காதலர்கள் பாலா-ப்ரியா. பாலாவிடம் இருக்கும் ஒரு பழக்கமான ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் ப்ரியாவுக்குப் பிடிக்கவில்லை. அதை விட்டுவிடக்கூறி பாலாவை அவள் வலியுறுத்துகிறாள்.

பாலாவும் ப்ரியாவிடம் இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக்குகிறாயே. அந்த அளவுக்கு இது ஒன்றும் மோசமான பழக்கம் இல்லை. நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு துளியைத்தானே செலவு செய்கிறேன். ஏனோ இதில் எனக்கு ஓர் ஆர்வம் இருப்பதால்தான் நாளொன்றுக்கு ரூபாய் ஐம்பதுக்கு வாங்குகிறேன். கோடிக்கணக்கில் பணம் பரிசாகக் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுவோமா? சமயங்களில் ஓரிரு எண்களில்கூட பரிசு தவறிவிடுகிறது. பணம் பரிசாகக் கிடைக்கவேண்டும் என்பதற்காக நான் இதைத் தொடரவில்லை. ஒரு விளையாட்டு போல்தான் இதைப் பார்க்கிறேன் எனச் சமாதானம் கூறுகிறான். இதனாலேயே அந்தக் காதலர்களுக்குள் கருத்துமோதல் வருகிறது

ஒரு கட்டத்தில் பீச்சுக்குச் சென்றும்கூட இந்தக் கருத்துமோதலினால் மௌனமாகிவிடுகிறார்கள். இந்த மௌனத்தின் பாரத்தால் பாலா, பீச் மண்ணைத் தோண்டி பள்ளம் உருவாக்குகையில் ஒரு பத்து ரூபாய் நோட்டு அவன் கைக்குக் கிடைக்கிறது. அதைக் கண்ணுறும் ப்ரியா பாலாவிடம், ஆஹா, இன்னிக்குத்தான் உனக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இந்தப் பணத்தில் எனக்கு ஒரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடு என்கிறாள். ஆனால் பாலாவோ, நீயே அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது எனச் சொல்லிவிட்டாய். எனவே, இந்தப் பணத்தையும் சீட்டு வாங்கத்தான் செலவிடப் போகிறேன். அதுக்குப் பரிசு கிடைத்தா, நிஜமாகவே எனக்கு அதிர்ஷ்டம் இருக்குன்னு அர்த்தம். இல்லைன்னா நான் லாட்டரி சீட்டு வாங்கறதையே நிறுத்திடறேன் என்று கூறி அவன் முடிவில் உறுதியாக நிற்கிறான். அவளும் நீ எக்கேடோ கெட்டுப்போ. எனக்கு வேற பணத்துல ஐஸ்க்ரீம் வாங்கித்தா எனக்கூறி அங்கிருந்து கிளம்புகிறாள்.

மூன்று தினங்கள் கழித்து அவளுக்குப் போன் செய்யும் பாலா அவளிடம், அந்தப் பத்து ரூபாய் நோட்டு ஞாபகமிருக்கா. அதுக்கு சீட்டுகூட வாங்கப்போறேன்னு சொன்னேன்ல. அதே மாதிரியே வாங்கினேன் எனச் சொல்லி வருகையிலேயே ப்ரியா பாலாவிடம், சரி. அதுக்கு இப்போ என்ன? உனக்குப் பத்து கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கா? எனக் கிண்டலாகக் கேட்கிறாள். கேட்கும் அதே சமயம், உள்ளுக்குள் அது உண்மையாக இருந்தால் இப்போதே ஐம்பது ரூபாய்க்கு சீட்டு வாங்கும் அவன் பழக்கம் பின்னர் ஐநூறு, ஐயாயிரம் என்று பைத்தியம் முற்றிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் நிழலாடுகிறது.

ஆனால் நல்ல வேளையாக பாலா, அந்தச் சீட்டுக்குப் பரிசு விழவில்லை. எனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான். இனி நான் சீட்டு வாங்குவதையே விட்டுவிடப் போகிறேன் என்றுகூறி அந்தப் பழக்கத்தையே விட்டுவிடுகிறான். ப்ரியாவுக்கோ அந்தப் பத்து ரூபாய்தான் உண்மையில் அதிர்ஷ்டம் வாய்ந்த நோட்டு என்ற எண்ணம் ஏற்படுவதாகக் கதை முடிகிறது.

கதையின் அடிநாதம் என்ன என்பது இப்போது உங்களுக்கு இந்தக் கட்டுரையின் தலைப்பிலிருந்தே புரிந்திருக்கும். சரி, வாருங்கள் கட்டுரைக்குள் செல்வோம்

புகைப் பிடிப்பவர்களிடமும் மது அருந்துபவர்களிடமும் இந்தப் பழக்கத்தை உங்கள் குடும்பத்தினருக்காகவாவது விட்டுவிடக் கூடாதா என நீங்கள் உங்கள் நண்பரிடமோ உறவினரிடமோ கேட்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு அந்த உறவினரோ நண்பரோ,

‘எனக்கும் இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. நானும் முயற்சி செய்து பார்க்கவும் செய்கிறேன். ஆனாலும் இயலவில்லை’ எனப் பதிலளிக்கிறார்.

கேட்ட நமக்கோ, ‘என்ன இவர் இப்படிச் சொல்கிறார்? மன உறுதி இருந்தால் எதுவும் சாத்தியம்தானே? முயற்சித்துப் பார்க்காமல் இப்படிச் சொல்கிறார் போலும்’ என எண்ணுவோம். அனுபவப்பட்டவர்களோ அவர்கள் சொல்வது சரிதான் என்ற முடிவுக்கு வருவர். ஏனெனில், பழக்கம் அந்த அளவுக்கு வலிமை மிக்கது.

புகைப் பிடிப்பதும் மது அருந்துவதும் மட்டும்தானா பழக்கம்? ‘எனக்குக் காபி குடிக்கலேன்னா எந்தவொரு வேலையுமே ஓடாது சார்’ என்கிறவர்களும் பழக்கத்தின் பிடியில் அகப்பட்டவர்கள்தான்.

இதுபோன்று விட முடியவில்லை என்று சொல்கின்ற அனைத்துமே பழக்கத்தின் பிடிப்புக்கு அகப்பட்டவைதாம். அது நல்ல பழக்கமாக இருந்தாலும் சரி, கெட்ட பழக்கமாக இருந்தாலும் சரி. ஏனென்றால், `Habit is the Second Nature' என்ற பழமொழியே இருக்கிறதே!

ஒருவகையில் திருடர்களும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்தாம் என்பதை ‘துப்பறிதல் நவீன முறைகள்’ என்ற நூலிலுள்ள ஒரு கட்டுரை சுவைபடத் தெரிவிக்கிறது. அந்தக் கட்டுரை கூறும் செய்திகளைப் பார்ப்போம்.

திருட்டுகள் சுலபமாக நடப்பதற்கு வசதியளிக்கக்கூடிய பல்வேறு அம்சங்களில் வாய்ப்பு என்பது மிகவும் முக்கியமானது. வாய்ப்பை உடனடியாகக் கண்டுபிடிப்பதிலும் அதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்வதிலும்தான் வாடிக்கைத் திருடன் மிகத் திறமை வாய்ந்தவன். ஆரம்பத் திருடனுக்கு சந்தர்ப்பம்தான் முதலில் கவர்ச்சியையும் வெற்றியையும் கொடுத்து அவனை நிரந்தர திருட்டுத் தொழிலுக்கு இழுத்துச்செல்கிறது. குற்றங்களைத் தடுப்பது பற்றிச் சிந்திக்கும்போது அதிலிருக்கக்கூடிய வாய்ப்புகளை, தெரிந்தோ தெரியாமலோ நாமே அளிக்கக்கூடிய வாய்ப்புகளையும் ஆராயவேண்டும். எங்கே வாய்ப்புகள் இல்லையோ அங்கே வாடிக்கைத் திருடன் புத்திசாலித்தனமாக ஒரு வாய்ப்பை உண்டுபண்ணுவான் என்பதையும் நாம் உணரவேண்டும்.

குற்றங்கள் நிகழ்வதை ஆராயும்போது சிலவகைக் குற்றங்களில் ருசிகரமான காலத்தையொட்டிய தன்மை ஒன்றிருப்பதைப் பார்க்கிறோம். பொருளாதார நெருக்கடி, விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைகள் மிகுதிப்பட்டுள்ள காலங்களில் குற்றங்கள் அதிகப்படியாக நடப்பது பொதுப்படையான அளவில் பார்க்கிறபோது உண்மையாக இருக்கும். ஆனால் குறுகிய அளவிலும் நடைமுறையிலும் பார்க்கிறபோது அடிக்கடி கிடைக்கக்கூடிய வாய்ப்புகளையொட்டியே அத்தகைய சந்தர்ப்பங்களில் நடக்கக்கூடிய குற்றங்களும் அடிக்கடி நிகழ்கின்றன என்பது தெளிவாகும்.

பழக்கத்தையொட்டியும் சில குறிப்பிட்ட வகைத் திருட்டுகள் நடைபெறுகின்றன. ‘பழக்கம் கொடிதன்றோ பாறையிலும் கோழி கிண்டும்‘ என்பது பழமொழி. மனிதப்பிறவியே பழக்கத்துக்கு அடிமைதான். திருடர்களும் மனிதர்கள்தானே! அவர்கள் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? உடலமைப்பு அல்லது மனோநிலையை ஒட்டியே பழக்கம் ஏற்படுகிறது. பழக்கமே குறிப்பிட்ட சில முறைகளைக் கையாண்டு குறிப்பிட்ட சிலவகைக் குற்றங்களை மட்டுமே செய்ய திருடனைத் தூண்டுகிறது. உதாரணமாக ஜேப்படித் திருடன் ஜேப்படித் திருட்டுகளை மட்டுமே செய்கிறான். ஏனென்றால், அதில் அவனுக்கிருக்கும் பழக்கமும் பயிற்சியும், சாமர்த்தியமாகவும் வெற்றிகரமாகவும் திருடுவதற்கு அவனுக்கு நம்பிக்கையூட்டுகின்றன. வீடு புகுந்து திருடுவதை அவன் விரும்புவதில்லை. அதற்கேற்ற பழக்கமும் பயிற்சியும் அவனுக்கு இல்லை என்பதால் அதை அவன் அறவே வெறுக்கிறான். மேலும் ஒவ்வொரு திருடனுக்கும் அச்சம் வெவ்வேறு அளவில் இருக்கிறது. எத்தகைய அபாயங்களைச் சுலபத்தில் அவனால் தாண்டிவிட முடியுமோ அந்த வகைக் குற்றங்களையே அவன் செய்யத் துணிவான். எதிர்பாராமல் நிகழக்கூடிய சாதகமான சந்தர்ப்ப சூழ்நிலை சில சமயம் சிலரைக் குறிப்பிட்ட ரகத் திருட்டுகளில் மட்டுமே ஈடுபடச் செய்வதும் உண்டு. உதாரணமாக, ஒரு திருடனிடம் திருட்டுச் சைக்கிள்களை மட்டுமே விலைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய பாதுகாவலான திருட்டுச் சாமான் வியாபாரி ஒருவன் கிடைத்துவிடுகிறான் என்றால், அந்தத் திருடன் பழக்கமான சைக்கிள் திருடனாகி விடுகிறான்.

பூட்டிக்கிடக்கும் வீடுகளிலுள்ள பூட்டுகளை உடைத்து அந்தப் பூட்டுகளை மட்டுமே திருடும் திருடன், பங்களாக்களைச் சுற்றியுள்ள வேலிக் கம்பிகளை மட்டுமே திருடும் திருடன், கிறித்துவக் கல்லறைகள், கோரிகளிலிருந்து சலவைக் கற்களையும், முனிசிபல் சாக்கடைகளின் திறப்புகளில் உள்ள இரும்பு மூடிகளையும், தெரு தண்ணீர்க்குழாய்களில் உள்ள பித்தளை அடைப்பான்கள் மற்றும் நட்டுகளையும், தெருவிளக்கு கம்பத்திலுள்ள பல்புகள், பங்களாக்களிலுள்ள பித்தளை பெயர்ப்பலகைகளையுமே வழக்கமாகத் திருடும் திருடர்கள் அனைவருமே பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட தன்மையினர்தாம். இவர்கள் பிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட பிறகும்கூட, இந்தப் பழக்கத்தின் கொடுமை அவர்களைப் பிடித்து ஆட்டிவைக்கிறது என்பதுதான் இதில் மிகவும் விசித்திரமாக இருக்கிறது. பழக்கத்தின் ஆற்றல் விசித்திரமானது. அடிமைப்படுத்திவிடும் வலிமை மிக்கது.

ஆகவே, திருடர்களை உருவாக்குவதில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தப் ‘பழக்கம்’ என்ற அம்சம், குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய அடிப்படையான விஷயமாக இருக்கிறது. குற்றங்களைக் கண்டுபிடிப்பது என்ற பிரச்னையில் இரண்டு பிரதான முறைகள் இருக்கின்றன.

ஒன்று - குற்றவாளிகளைப் பொறுத்து எழுவது.

அடுத்ததோ நிகழ்ந்த குற்றத்தின் வகையை ஒட்டி எழுவது.

குறிப்பிட்ட குற்றவாளி எந்த வகைக் குற்றங்கள் புரிவதில் பழக்கப்பட்டவன் என்பதைக் கொண்டு துப்பு துலக்குவது முதல் முறை.

இரண்டாவதிலோ, நிகழ்ந்த ஒரு குற்றம் குற்றங்களின் பல்வேறு வகைகளில் எந்த ரகத்தைச் சேர்ந்தது என்று ஒப்புநோக்கிக் கண்டறிந்து, பிறகு தெரிந்த திருடர்களை வைத்துக்கொண்டு அந்த வகைக் குற்றம் புரியும் பழக்கமுடைய எந்தத் திருடனின் திருட்டுமுறையோடு இது பொருந்துகிறது எனக் கண்டறியப்படுகிறது.

இப்போது இந்தக் கட்டுரையைப் படித்துமுடிக்கும் நீங்கள்,

‘இந்தப் பாழாய்ப்போன பழக்கம் மட்டும் திருடர்களைப் பிடிக்கவில்லை என்றால், அவர்களும் நல்லவர்களாக வாழலாமோ’ என்று அவர்கள் சார்பாக நீங்கள் யோசிக்கத் தலைப்பட்டாலும் ஆச்சரியமில்லை. ஆச்சரியப்படுவதோடு நின்றுவிடாமல் அவர்களை மீண்டும் அத்தொழிலுக்கே செல்லவிடாமல் தடுக்கும் வழிமுறைகளையும் மேற்கொண்டீர்களானால் சமூகத்துக்குச் செய்யும் பெருந்தொண்டாகவும் அது திகழும்.

ஒன்பது ரூபாய் நோட்டு படம் வந்து கொஞ்ச நாள்கூட ஆகலை. அதுக்குள்ள பத்து ரூபாய் நோட்டுன்னு ஒரு கதை வந்திருக்குன்றீங்க. என்ன பழக்கம்க இது என என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வேன்?

விடுங்க, எல்லாம் பழக்கதோஷம்தான்!

Friday, September 14, 2007

பிள்ளையின் சில லீலைகள்...

முருகு விரியுந் தொடைப் புயத்து
முதல்வா வருக வருகவே!
மூரிக் கலசைச் செழுங்கழுநீர்
முனியே வருக வருகவே!
- கலசைச் செழுங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்.


குழந்தைகள் விளையாடுவதைக் காண்பதே ஓர் தனி அழகு. குழந்தைகளின் விளையாட்டே லீலைகள்தாம். பெரியவர்களின் லீலைகளைக் காட்டிலும் சிறு பிள்ளைகளின் லீலைகளே நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவல்லவை.

சிறு குழந்தையாக கண்ணபிரான் நிகழ்த்திய லீலைகளும் சேட்டைகளும் மிகப் புகழ் பெற்றவை. அவனது விளையாட்டில் மனத்தைப் பறிகொடுக்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். சிறு குழந்தையான கண்ணனின் லீலைகளை 'பாகவதம்' விரிவாக எடுத்துரைக்கும்.

அருணகிரிநாதரும் முருகனின் பால லீலைகளில் தன் மனத்தை இழந்து பல பாடல்களை இயற்றியுள்ளார். பழங்காலப் புலவர்கள் மற்றும் கவிஞர்கள், தெய்வக்குழந்தைகள் பலரின் பிள்ளைப்பருவத்தை 'பிள்ளைத்தமிழ்' பிரபந்தங்களாகப் பாடியுள்ளனர். ஒரு சில நூற்றாண்டுகள் முன்புவரை விநாயகப் பெருமானின் பிள்ளைத்தமிழ் பிரபந்தந்தை கவிஞர்கள் எவரும் பாடவில்லை. 17-ஆம் நூற்றாண்டில்தான் சிவஞான முனிவர் என்ற புலவர் 'கலசைச் செழுங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்' என்ற சிற்றிலக்கியத்தைப் பாடியருளினார். இந்தப் பிள்ளைத்தமிழ் அரங்கேறிய ஆண்டு கி.பி.1712 ஆகும்.

சிவஞான முனிவர் பாண்டிய நாட்டில் விக்கிரமசிங்கபுரம் என்ற ஊரில் பிறந்தார். சிவஞான முனிவருக்கு சம்ஸ்கிருதத்தில் நல்ல பாண்டித்யம் இருந்தது. மகான் அப்பய்ய தீட்சிதர் இயற்றிய 'சிவதத்துவ விவேகம்' என்ற மூல நூல் பாடல்களை தமிழில் சுவையுற தந்துள்ளார். கலசைச் செழுங்கழுநீர் பிள்ளைத்தமிழ் நூலிலே தன்னைத் தாயாய் பாவித்து, தாயன்பில் திளைக்கும்வகையில் பிள்ளையை செல்லப்பிள்ளையாக நினைந்து பாடியுள்ளார்.

'கலசை' என்ற ஊர் ஒரு சிவத்தலம். ஆவடிக்கும் திருவள்ளூருக்கும் இடையேயுள்ள இத்தலத்துக்கு ஆதியில் 'தொட்டிக் கலை' என்றே பெயர். ஒரு காலத்தில் பசுக்கொட்டில்கள், நீர்த்தொட்டிகள் மிகுதியாக இருந்ததால் இப்பெயர் வழங்கப்பெற்று காலப்போக்கில் கலசையாகச் சுருங்கிற்றாம். ஒரு காலத்தில் ஆலயத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் செங்கழுநீர்ப் பூக்கள் நிறையப்பூத்து அதை விநாயகருக்குச் சாற்றிவர நாளடைவில் செழுங்கழுநீர்ப் பிள்ளையார் என்ற நாமம் வந்திருக்கலாம்.

இனி பிள்ளையின் லீலைகள் சிலவற்றைக் காண்போம்...

மோதகப்பிரியனான மாதங்க முகத்தான் ஒருமுறை பெரியதொரு தாம்பாளம் நிறைய மோதகங்களை எடுத்துக்கொண்டு யாரும் வராத தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டார். அத்தனை மோதகத்தையும் தான் ஒருவரே தின்றுவிடவேண்டும் என்பது அவரது பேரவா. ஆனால், பெற்றோருக்கோ இந்த விஷயம் தெரிந்துவிட்டது. வயிறு புடைக்க கொழுக்கட்டைகளைத் தின்றுவிட்டு தங்கள் பிள்ளை திணறினால் என்ன செய்வது
என்றெண்ணி அவரிடம் வந்தனர்.

'ஏன் பிள்ளாய்! இவ்வளவு மோதகத்தையும் நீ ஒருவனே தின்றால் உன் உடம்புக்கு வந்துவிடாதா? தம்பிக்கும் சிறிது கொடுக்கலாம் அல்லவா?' என அன்புடன் கேட்டனர்.

'தம்பி முருகனோ என்னைவிடச் சின்னக் குழந்தை. அவன் என்னோடு போட்டி போட்டுக்கொண்டு மோதகத்தைத் தின்று அதில் அவன் உடம்புக்கு வந்துவிட்டால் கஷ்டப்படுவானே என்றுதான் நான் இவ்வாறு ஒதுக்கிடம் தேடி வந்துவிட்டேன்' எனக் குறும்பாகக் கூறினார்.

'முருகன் சிறியவன். அவன் உடம்புக்கு ஆகாது, சரிதான். நாங்கள் பெரியவர்களாயிற்றே, எங்களுக்குத் தரலாம் அல்லவா?' என பெற்றோர் ஆனைமுகனை மடக்கினர்.

பிள்ளையாரும் 'ஆஹா! தாராளமாகத் தரலாமே! ஆனால் ஒரு நிபந்தனை' என்றார் பெற்றோரிடம்.

'அது என்ன?' பெற்றோர் கேட்டனர்.

'நான் பந்துபோல மோதகத்தை உயரத் தூக்கிப்போடுவேன். நீங்கள் அதைப்பிடித்துத் தின்னவேண்டும், சம்மதமா?' நிபந்தனையைக் கூறினார் விநாயகர்.

'எங்கள் வயது என்ன, எங்களிடமே உன் விளையாட்டா?' என விளையாட்டாகக் கடிந்துகொண்டாலும் அவரது நிபந்தனைக்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

பிள்ளையார் மோதகத்தை உயரே தூக்கிப்போட்டார். அம்மையும் அப்பனும் போட்டி போட்டுக்கொண்டு மோதகத்தைப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், கொழுக்கட்டை அவர்கள் கைக்குக்கூட எட்டவில்லை. கைக்கு எட்டினால்தானே வாய்க்கு எட்டும்! இந்தப் பிள்ளையின் விளையாட்டில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதுதான் மிச்சம். இருவருக்கும் கொழுக்கட்டை ஒன்றுகூட கிடைக்கவில்லை. காரணம், கஜகர்ணம்
போட்டாலும் உங்களால் கொழுக்கட்டையைப் பிடிக்கமுடியாது என்பதுபோல தம் தும்பிக்கையை அவர்கள் தலைக்கு மேலே நீட்டி பிள்ளையாரே அந்தக் கொழுக்கட்டைகளைப் பிடித்துக்கொண்டுவிட்டதுதான்.

பிள்ளையின் இந்த அழகிய லீலையில் மதிமயங்கிய அம்மையும் அப்பனும் மத்தள வயிறனை 'பொல்லாப் பிள்ளையடா நீ!' எனக்கூறி விரல் சொடுக்கி திருஷ்டி கழித்தனர். பெற்றோரையை விளையாடவைத்து தாமும் விளையாடி மகிழ்ந்ததால் 'விளையாட்டுப் பிள்ளையார்' என்ற நாமமும் பிள்ளைக்கு உண்டு.


இன்னொரு சமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு அழுதுகொண்டே வந்த பிள்ளையார் பெற்றோரிடம், 'என் காதைப்பிடித்துக் கிள்ளிவிட்டான் தம்பி' எனக் கூறினார்.

'அந்த வேலவன் துஷ்டன்தான்' என்று சொல்லிக்கொண்டே சிவன் அவசர அவசரமாக வேலவனைக் கூப்பிட்டு, 'அண்ணன் சொல்வது உண்மைதானா?' என விசாரித்தார்.

'அண்ணன் மட்டும் என் முகங்களிலுள்ள கண்களை ஒன்று, இரண்டு என்று விரலால் குத்திக் குத்தி எண்ணலாமா?' என்று கண்ணைக் கசக்கினார் கந்தன்.

'இவர்களுக்கென்றே தனியாக ஒரு நியாயாதிபதியை நியமிக்கவேண்டியிருக்கும் போலுள்ளதே!' எனச் சொல்லிக்கொண்டே பிள்ளையிடம், 'நீ ஏன் தம்பியிடம் அவ்வாறு நடந்துகொண்டாய்?' என்று சிவபெருமான் கேட்டார்.

பிள்ளை உடனே தன் துதிக்கையைத் தொட்டுக்காட்டி, 'இந்த நீளத்தைத்தான் தம்பி முழம் போட்டுப் பார்த்தான்' என்று முணுமுணுத்தார்.

இதைக்கேட்ட சுப்பிரமணியருக்கோ சிரிப்பு தாளவில்லை. முதன்முதல் குறும்பு செய்தவர் அவராதலால், சிரித்துக்கொண்டே ஓடி நீலமயிலில் சென்று ஏறிக்கொண்டார்.

இதைக் கண்ணுற்ற உமை அன்னை விநாயகரை அணைத்துக்கொண்டு, 'என் பிள்ளை இல்லையா, நீ?' என்று பூரித்துப்போனாளாம்.

இந்த விளையாட்டை யார் நேரில் பார்த்தது?

சிவப்பிரகாச சுவாமிகள் இதை மானசீகமாகக் கண்டு பாட்டாகப் பாடியுள்ளார்.

Monday, March 26, 2007

ஸ்ரீராம நவமி - 27.03.2007.

ராம நவமியும் ராம நாம மகிமையும்!

திருமாலின் தசாவதாரங்களில் ஏழாவது அவதாரம் ராம அவதாரம். ஸ்ரீராமர் அவதரித்ததும் ஏழாவது நட்சத்திரமாகிய புனர்பூச நட்சத்திரத்தில். புனர்பூச நட்சத்திரம் உச்சத்திலிருக்கும் சுக்கில பட்ச திதியான ஒன்பதாம் நாளில், நவமி திதியில் ராமபிரான் அவதரித்த தினமே ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது.

ஏழு என்ற எண்ணின் அடிப்படையில் பார்த்தால், வாரத்துக்கு நாட்கள் ஏழு. சூரியன் பவனி வரும் தேரின் குதிரைகள் ஏழு. சப்த ரிஷிகள், சப்த ஸ்வரங்கள் என்கிற விதத்தில் ஏழாவது அவதாரமாகிய ஸ்ரீராம அவதாரமும் விசேஷம் வாய்ந்தது.

சுக்ல ப்ரதமை முதல் நவமி வரையில் ஒன்பது நாளும் ஸ்ரீராமருக்கு துளசி மாலை அணிவித்து, ஸ்ரீராமாயணம் பாராயணம் செய்து ராம பூஜை செய்வது சிறப்பு. அவ்விதம் பூஜை செய்ய முடியாதவர்கள் ஸ்ரீராம நாம ஜபம் செய்து வந்தாலே போதுமானது.

ஸ்ரீராம நவமியன்று விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு, 'சொல்லின் செல்வன்' அனுமனின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். அன்று எலுமிச்சை, புளி, வெல்லம் கொண்டு தயாரிக்கும் பானகமும், மோரில் தயாரித்த பானகமும் நிவேதனம் செய்வார்கள்.

சில கிராமத் திருக்கோயில்களில் நீர் மோர் பானகத்துடன், ஊறவைத்த வடை, பருப்பில் வெள்ளரிப் பிஞ்சுகளை நறுக்கிப் போட்டு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்கள். ஸ்ரீராமர் அவதரித்தது கோடைக் காலத்தில். எனவே, கோடை உஷ்ணத்தைத் தணிக்கும் வகையில் பக்தர்களுக்கு இந்தப் பிரசாதங்களுடன், சில இடங்களில் விசிறியும் தருவார்கள். பண்டிகைக் காலங்களிலாகட்டும் அல்லது மற்ற சாதாரண நாட்களிலாகட்டும். வாழ்க்கையின் தாத்பர்யமே பிறர் துயரங்களைக் குறிப்பறிந்து தீர்ப்பதில்தான் இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது.

ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினராக வந்தவர் ஸ்ரீராமர். 'ராம' என்னும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து வந்ததினால்தான், ரத்னாகரன் என்ற வேடன் வால்மீகி மஹரிஷியாகப் பரிபக்குவமடைந்தார். இதை வால்மீகி முனிவரே,

'ராமா த்வன் நாம மஹிமா வர்ண்யதே கேன வா கதம்
யத் ப்ரபாவாதஹம் ராம் ப்ரம்ம ரிஷித்வமவாப்தவான்'


ராமா - ஏதொன்றினுடைய ஆற்றலால் யான் பிரும்ம ரிஷி நிலையை அடைந்தேனோ அத்தகைய உன் பெயரின் பெருமையை யாரால் விளக்க இயலும்? என்று கேட்கிறார்.

'ராம நாமம் பஜரே மானஸ' - ராமனின் பெயரையே நினைத்திரு மனமே! என்று தியாகப் பிரும்மமும் ராம நாமத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

'ராம' என்ற வார்த்தைக்கு ஆனந்தம் என்று பொருள். ராம என்ற சப்தத்துக்கு ஆனந்தத்தைத் தருபவன் என்று பொருள். 'ஓம் நமோ நாராயணாய' என்பது அஷ்டாட்சரம். 'நமசிவாய' என்பது பஞ்சாட்சரம். இவையிரண்டிலும் அமைந்துள்ள வாக்கியங்களில் முறையே 'ரா', 'ம' என்ற இரண்டு அட்சரங்களைப் பெற்றால் 'ராம' என்ற மூலமந்திரம் கிடைக்கும். இவையிரண்டுமே இந்த அஷ்டாட்சரம், பஞ்சாட்சரம் என்ற மந்திரங்களுக்கும் உயிர்நாடி போலும் அமைந்துள்ளன.

ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது 'ராம' நாமமே. எல்லாவித பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது 'ஸ்ரீராம நாமம்'.

ஸ்ரீ ஆஞ்சநேயரின் அபரா அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மஹான் 'ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சுவாமிகள்' மாருதியைப் ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று 'த்ரயோதசாக்ஷரி'யான 'ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்' என்ற மஹா மந்த்ரத்தை உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.

காசி க்ஷேத்திரத்தில் மரிக்கும் ஜீவன்கள் - விலங்கானாலும், மனிதர்களானாலும் இடப்பக்கம் திரும்பியே ஜீவனை விடும் என்றும், அவ்வாறு உயிர் பிரியும் சமயத்தில் ஸ்ரீபரமேஸ்வரன் ஜீவனது வலது காதில், தாரக நாமமான 'ராம ராம ராம' என்ற நாமத்தை உபதேசித்து முக்தி அளிப்பதாக ஐதீகம்.

ராம நாமாவை ஜபிக்கும் முறை!

'ஓம்' என்று சற்று நிறுத்தி, பின்பு 'ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம' என்று நிதானமாக பயபக்தியுடன் ஜபியுங்கள். ஜபிக்கும்போது ஸ்ரீராமனே உங்கள் எதிரில் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு எண்ணிக்கை நூற்றெட்டுக்குக் குறையாமல் ஜபியுங்கள். முடிந்தால் 21,600 வரை தினமுமே ஜபிக்கலாம். ஆரம்பத்தில் குறைந்தபட்சம் அரை மணி நேரம் எவ்விதச் சிந்தனையும் இல்லாது நிதானமாக தினமும் ஜபியுங்கள்.

ஓர் ஆண்டுவரை ஜபத்தை - கண்டத்தில் செய்யுங்கள். இருதயத்தில் ஓர் ஆண்டு செய்யுங்கள். நாபியில் ஓர் ஆண்டு செய்யுங்கள். நாளடைவில் ஒவ்வொரு ரோமத் துவாரமும் 'ராம' நாமத்தைத் தானாகவே சொல்லும். உங்கள் உடம்பு முழுமையும் மந்திரத்தின் சக்தியால் நிறைந்துவிடும். நீங்கள் எப்பொழுதும் தெய்வப் பிரேமையில் இருப்பீர்கள். நீங்கள் 'ராம' மந்திரத்தை 13 கோடி முறை பக்தி சிரத்தையுடன் ஜபித்தால், அவரது தரிசனமும் கிட்டும்.

நீங்கள் விடாமுயற்சியுடன் இதைத் தொடர்ந்து செய்தால் நான்கு வருடங்களில் செய்து முடிக்கலாம். இது உண்மை. மூன்று விஷயங்கள் உலகத்தில் அருமையானவை. அவை - மனிதப் பிறவி, மோட்ச விருப்பம், சத்குருவின் கிருபை. நற்குணமுள்ள நல்ல ஆத்மாவுக்குத்தான் குரு கடாட்சம் கிடைக்கும். ராம நாமாவினால் பலன் ஏற்பட வேண்டுமானால், உங்களுக்கு நம்பிக்கை அவசியம் இருக்க வேண்டும். ராமநாமாவை உச்சரிப்பதனால் ஏற்படும் சலனமானது, மனத்தை - ராஜஸ, தாமச குணங்களிலிருந்து சத்வ குணத்துக்கு மாற்றுகிறது.

வியாதியைக் குணப்படுத்தும் மருந்தைப்போல், காந்திஜி அவர்கள் புண்ணிய நாமாவால் வியாதியைக் குணப்படுத்தும் முறைக்கு 'நாமாபதி' அல்லது 'நாம தெரப்பி' என்று கூறினார். அவரது மகன் மணிலால் ஒருமுறை டைபாய்ட் காய்ச்சலால் அவதிப்பட்டபோது, காந்திஜி அவர்கள் ஓர் ஈரத்துணியை எடுத்து அதிக உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக மணிலாலின் முன்நெற்றியில் வைத்து 'ஸ்ரீராம' நாமத்தை மிக ஆழ்ந்த பக்தியுடன் ஜபித்துக் குணமாக்கினார்.

'சுபஸ்ய சீக்கிரம்' என்ற பழமொழிப்படி நன்றே செய்யவும். நன்றும் இன்றே செய்யவும். நாளை என்பது எமனுடைய நாள். மனம் ஒவ்வொரு நிமிடமும் மாறும் தன்மையுள்ளது. நல்ல கருமத்தை உடனே செய்யவும். நமது உள்ளத்தில் ஒரு சுயநலச் சிந்தனையோ அசுத்தமோ இவை எது இருந்தாலும், அவைகளைக் களைந்தெறிந்து ஸ்ரீராமரைத் தியானம் செய்வோம்!

Wednesday, January 17, 2007




தை அமாவாசை 18/01/2007.

அமாவாசையை பெளர்ணமியாக்கிய அபிராமசுந்தரி...

சிவபெருமான் வீரச்செயல் புரிந்த இடங்களை `வீரட்டானங்கள்` என்றழைப்பர். சிவபக்தியில் சிறந்து விளங்கிய மார்க்கண்டேயர் மிருகண்டு முனிவரின் புதல்வர். பதினாறு வயதில் மார்க்கண்டேயருக்கு மரணம் என்பது பிரமன் விதித்த விதி. இதையறிந்த மார்க்கண்டேயர் இறையருள் பெற 108 தலங்களுக்குச் சென்று வழிபட்டார். 108-வது தலமாக திருக்கடவூர் சென்று அமிர்தகடேஸ்வரரை தஞ்சமடைந்து மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரத்தால் அவரை வழிபட, இறைவன் ம்ருத்யுவாகிய யமன் வரும் வேளையில் காலனைத் தன் காலால் சம்ஹாரம் செய்து, வீரச்செயல் புரிந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றியருளினார். இது இறைவன் தன் பக்தரான மார்க்கண்டேயருக்காகச் செய்த திருவிளையாடல்.

திருக்கடவூர் இறைவனின் திருவிளையாடல் இவ்விதம் ஒருபுறமெனில், திருக்கடவூர் இறைவியாகிய அபிராமியின் அருள் விளையாடலோ அதியற்புதமான விளையாடல். தன்னையே, தான் வேறு தன் பக்தன் வேறல்ல என்று உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் அன்னை. தன் திருவுருவத்தையே எண்ணியெண்ணி தவத்திலிருந்த தன் பக்தனின் வாயிலாக இதைப் புலப்படுத்த எண்ணினாள். சரபோஜி மன்னர் ஒரு தை அமாவாசையன்று இத்திருக்கோயிலுக்கு வந்தார். நிஷ்டையிலிருந்த அப்பக்தரை நோக்கி ‘இன்று என்ன திதி?` என்று கேட்டார். அன்னையின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே மனக்கண்ணால் கண்டுகொண்டிருந்த அவர், தை அமாவாசையைப் பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார்.

தன் தாடங்கத்தை நிலவாக்கி வானவீதியில் தவழவிட்டு பக்தனின் வாய்மொழி மெய்மொழியே என மெய்ப்பித்து பக்தனை அபிராமிபட்டராக்கினாள் அன்னை.

மேற்கூறிய திருவிளையாடல்களைக் கவனிக்கும்போது பக்தியையும் மீறி இரு கேள்விகள் எழும். அவை:

1. இறைவன் வகுத்த விதியை இறைவனே மீறலாமா?
2. பக்தனை வெளிக்காட்ட வேண்டிய அவசியம்தான் என்ன?


நிரபராதியொருவன் சந்தர்ப்பச் சூழ்நிலையால் குற்றவாளியாகக் கருதப்பட்டு அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் அவன், ஜனாதிபதிக்குத் தன் உண்மை நிலைகளை விளக்கி மேல்முறையீடு செய்கிறான். அந்த மேல் முறையீட்டில் ஏதோ ஓர் உண்மை அவர் கண்ணைத் திறந்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையின் போக்கு ஒருவிதத்தில் அவன் குற்றமற்றவன்
என்பதை நிரூபித்து, அவனைத் தூக்கு தண்டணையிலிருந்து விடுவிக்கச் சொல்லித் தீர்ப்பாகிறது. மனிதனுக்கு ஜனாதிபதி இறைவன் எனில், பக்தனுக்கு ஜனாதிபதியாகத் திகழ்பவன் சாட்சாத் அந்த இறைவனேதான்.

சட்டத்தைப் படைத்தவன் மனிதன். சட்டத்திருத்தங்களைப் படைத்தவனும் மனிதன். அந்தச் சட்டத்தையே கையில் எடுப்பவனும் மனிதன். மனிதனைப் படைத்தவன் இறைவன்; அந்த மனிதனின் விதியை நிர்ணயிப்பவனும் இறைவன்; அந்த விதியையே மாற்றுபவன் - அதாவது கையில் எடுப்பவன் - இறைவன் என்று கொண்டால் முதல் கேள்வி முனகிக்கொண்டு ஓடிவிடும்.

அடுத்து இரண்டாவது கேள்விக்கு வருவோம்.

பித்தம் தலைக்கேறினால் பைத்தியம் பிடிக்குமென்பர். ஒருவர் சினிமாமீது அதீத நாட்டம் கொண்டிருந்தால் அவரைச் ‘சினிமாப் பைத்தியம்’ என்கிறோம். இசையின்மீது பித்து அதிகமானால் ‘இசைப் பைத்தியம்’ என்பர். அதுவே புத்தகத்தின்மீது பித்து அதிகமாயிருந்தால் ‘புத்தகப் பைத்தியம்’ என்பர். அதாவது ஒன்றின் மீது பைத்தியம் என்பது அளவு கடந்த அன்பு, ஆர்வம் இருப்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ‘உள்ளே அன்பிலாது வெளியே அன்பு காட்டுகிறேன் பேர்வழி’ என்று நடிப்பவர்களால் உண்மை அன்பைô புரிந்துகொள்ள இயலாது. பட்டருக்கோ அபிராமிப் பைத்தியம்.

அந்த உண்மை அன்பை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டவே அம்பிகையின் இவ்விளையாடல்.

இனி திருக்கோயிலுக்கு வருவோம்.

பாடல்பெற்ற சோழநாட்டு ஸ்தலங்கள் 190-ல் 63 காவேரிக்கு வடகரையிலும், 127 தென்கரையிலும் அமைந்துள்ளன. தென்கரையிலுள்ள ஸ்தலங்களில் ஒன்றுதான் திருக்கடவூர் எனப்பெறும் திருக்கடையூர். மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. தூரத்திலும், பொறையாறிலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் உள்ள இந்த ஸ்தலம் - மூவர் பாடல்பெற்ற ஸ்தலங்கள் 44-ல் ஒன்றாக விளங்குகிறது.

63 நாயன்மார்களில் காரிநாயனார் மற்றும் குங்கிலியக் கலய நாயனார் இருவரும் வாழ்ந்து தொண்டு செய்து முக்தி அடைந்த ஸ்தலம். மேலும் சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கில் இரண்டாவதாகப் போற்றப்படும் ‘திருக்களிற்றுப் படியாரை’ இயற்றிய உய்ய வந்த தேவராயனார் அவதரித்த ஸ்தலமும் கூட.

இறைவன் - அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர்
இறைவி - அபிராமி
தலமரம் - வில்வம்
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்.

மேற்குப் பார்த்த சந்நிதிகளில் இக்கோயிலும் ஒன்று. மேற்குப் பார்த்த சந்நிதியின் சிறப்பு அஞ்ஞானம் விலகி ஞானம் கிடைக்குமாம்.

திருக்கடையூர் சென்று வழிபடுகையில் திருக்கடவூர் மயானம் சென்று வருதலும சிறப்பு. திருக்கடையூருக்கு நேர் கிழக்கேயுள்ளது இம்மயானம்.

மயிலாடுதுறை வேப்பஞ்சேரி நகரப் பேருந்து இவ்வழியாகச் செல்கிறது.

திருக்கடையூர் மயானத்தினருகிலுள்ள கோவிலின்

இறைவன் - பிரமபுரீசுவரன்
இறைவி - மலர்க்குழல் மின்னம்மை அம்மலக்குஜ நாயகி
தீர்த்தம் - காசி தீர்த்தம்.

இக்கோவிலும் மூவர் பாடல் பெற்ற ஸ்தலம்தான்.

இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. கொடிமரம் கிடையாது. உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. பங்குனி, அசுவினி நாளில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுகிறது. அம்பாள் கோவில் எதிரில் உள்ளது.

இனி அபிராமி கோவிலுக்கு வருவோம்.

கோபுரவாசல் வழியே நுழைந்து நேராகச் சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமரம் காணப்படுகிறது. அதையும் தாண்டி உள்ளே நேராகச் சென்றால் அமிர்தகடேஸ்வரரைக் காணலாம். அமிர்தகடேஸ்வரரைக் காணும் மகாமண்டபத்தின் வடக்குப்புறத்தில் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில், காலசங்காரக் கடவுள் எமனை நித்திரகானுக்கிரகம் பண்ணின தோற்றத்தில் தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். இடது
பக்கத்தில் பாலாம்பிகை திருமகள், கலைமகளாகிய சேடியருடன் விளங்குகின்றாள். கால சங்காரக் கடவுளுக்கு எதிரில் வடக்குமுகமாக எமன் (உற்சவமூர்த்தி) எருமையூர்தியுடன் இறையருளை நாடிய வண்ணமாகக் காணப்படுகின்றார். இக்கால சங்கார மூர்த்திக்கு ஆண்டில் பதினோரு முறை அபிஷேகம் நடக்கிறது. சித்திரைத் திருநாளில் ஆறாம் திருநாளன்றுதான் இச்சங்கார மூர்த்தி வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.

அமிர்த தீர்த்தத்தில் பங்குனி சுக்கிலபட்ச அசுவினியில் சுவாமி தீர்த்தங் கொடுத்தருளுவார். அன்றுதான் எல்லோரும் அத்தீர்த்தத்தில் மூழ்குவார்கள்.

அபிராமி சந்நிதி வெளிப்பிரகாரம் செல்லும் வழியில் வலப்பக்கத்தில் அமைந்துள்ளது. அம்மனுக்கு எதிரிலும் கொடிமரம் அமைந்துள்ளது.

இனி தை அமாவாசையை பௌர்ணமியாக்கிய அபிராமியின் அருள்திறனை வியந்து அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியைச் சற்று காண்போம்.

அந்தாதியாவது நூலின் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர், அடி ஆகிய இவற்றுள் யாதேனும் ஒன்று அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடி, இறுதிப் பாடலின் முடிவும் முதற்பாடலின் தொடக்கமும் ஒன்றாக இணையும்படி மண்டலத்து மாலை போலத் தொடுத்துப் பாடப்பெறும் ஒருவகைச் சிற்றியலக்கியமாகும். உதாரணமாக இந்த அபிராமி அந்தாதியில் 100-வது பாடலானது ‘குழையைத் தழுவிய’ என்று ஆரம்பித்து ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே’ என முடிகிறது. அபிராமி அந்தாதியின் முதல் பாடலோ ‘உதிக்கின்ற’ என ஆரம்பிக்கிறது.

முதல் பாடலைப் பார்ப்போம்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.


உச்சித் திலகம் என்பது புருவ மத்தியைக் குறிக்கும். யோகநெறியில் புருவமத்தியை ‘ஆக்கினை’ என்று சொல்வது வழக்கு. ஐம்புலன்களை கட்டுக்குக் கொண்டுவரும் மையம் ‘ஆக்கினை’. சாதாரணமாக திலகம், குங்குமம் இட்டுக்கொள்ளும் இடம் இந்தப் புருவ மத்தியில்தான். ஒன்றைக் குறித்து யோசிக்கும்போதுகூட விரலால் புருவமத்தியைத் தொட்டுக்கொண்டுதான் யோசிக்கிறோம். இதனையே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறார். ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்பது சூரியனின் செங்கதிர்களைக் குறிப்பது போல் தோன்றினாலும் - சூரியனின் கதிர்கள் எல்லாவுயிர்களையும் காப்பது போல், இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து இயக்குகிறான் என்பதை விளக்கவே ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ என்றார். அதாவது புருவமத்தியில் தோன்றி நம்மை இயக்குகிறாள் என்பது மறைபொருள். இதனை உணர்ந்தவர்கள் இறையை மாணிக்கமாக மதிக்கின்றனர்.

எனவே, எனக்கு விழுத்துணையாக அபிராமியைக் கொண்டேன் என்கிறார். அபிராமிபட்டர். அடுத்து ஒரு பாடல்:

கொள்ளேன் மனத்தில்நின் கோலம் அல்லா(து) அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசம யம்விரும் பேன்வியன் மூவுலகக்(கு)
உள்ளே அனைத்தினுக் கும்புறம்பே உள்ளத் தேவிளைந்த
கள்ளே களிக்கும் களியே அளியஎன் கண்மணியே


'உன்கோலத்தைத் தவிர மனத்தில் வேறெதையும் நினைக்க மாட்டேன்; அத்தன்மையே எனக்கு அருளுவாய்' என அபிராமியிடம் வேண்டுகிறார்.

உள்ளத்தில் எழும் சஞ்சலங்கள் சலனங்களுக்கெல்லாம் காரணம் வெளியில் பார்ப்பதால் ஏற்படும் மயக்கங்களே என்பதை ‘உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்ளே’ என்ற வரிகள் விளக்குகின்றன. மாயை அகலவேண்டுமெனில் அவளையே தவம் செயயவேண்டுமென

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும் முத் தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னஞ் தனியிருப் பார்க்கிது போலும் தவமில்லையே


என மேற்கூறிய பாடலின் வாயிலாகக் கூறுபவர், அவள் அழகை -

அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ் சேயிரங் கேல் உனக்(கு) என் குறையே


என்று வர்ணிக்கும் அதே சமயம், நான் அவள் நினைவிலேயே அவ்விதம் சொன்னேன். காக்கவேண்டிய அவளே கண்ணை மூடிக்கொண்டிருக்க, நான் உன்னிடம் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது என தன் அகத்தையே குறை கூறிக்கொள்பவர் பலவாறாக அவள் நாமங்களைப் பாடுவார். அவள் கண் திறந்தால் நடக்காதது எதுவும் இல்லை என்பதை 78-வது பாடலில்,

விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத் தேன்என் துணைவிழிக்கே.


என்று அவளது கடைக்கண் பெருமையைக் கூறி, 79-வது பாடலில் ‘விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலைத் தொடர்ந்து முடிக்க அன்னை அபிராமி தன் மகன் அபிராமிபட்டருக்காக நிலவை வானில் தவழவிட்டாள். அதன் பின்னர் அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடித்தார் பட்டர்.

அவளையே தவம் செய்த அபிராமிபட்டருக்கு அவள் அருள்மழை பொழிந்தாள். நாமும் தவம் செய்து அவள் அருளைப் பெறலாம்.

Friday, January 05, 2007

திருலோக சீதாராமின் அறிமுகம்...

ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு நீங்கள் செல்கிறீர்கள். தேர்வை மேற்கொள்பவர் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறார் என்று வைத்துக கொள்வோம். உங்களில் எத்தனைபேர் உங்களை அறிமுகப்படுத்துவதில் உவகையுடன் பங்கேற்பீர்கள்?

சிலருக்கு, நாம்தான் விண்ணப்ப மனுவிலேயே எல்லா தகவல்களையும் கொடுத்து விட்டோமே. இன்னமும் என்ன அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற சலிப்பு உள்ளுக்குள் ஏற்படும். இன்னும் சிலரோ, மேலும் நம்மைப் பற்றிய விவரங்களை அறிய விரும்புகிறார் போலும் என உணர்ந்து தங்களைப் பற்றிய இன்னும் கூடுதலான விவரங்களை தயங்காமல் எடுத்துரைப்பர்.

இதற்குள் சிலர் எதற்கு இந்த நேர்முகப் படலம் என்று உள்ளுக்குள் வினா எழுப்பியிருப்பார்களானால், அவர்களுக்கு இந்த அறிமுகத்தைப் பற்றிய அறிமுகமாக இருக்கட்டுமே என்றுதான் மேற்குறிப்பிட்ட நேர்முகத் தேர்வுப் படலம்.

சிலருக்கு, பலரைத் தேடிச் சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொள்வது தொழிலாக இருக்கும். இன்னும் சிலருக்கோ, அவர்களின் அறிமுகம் கிடைக்காதா நமக்கு என்ற ஏக்கம் இருக்கும். இன்னும் சிலரின் அறிமுகமோ, நம் அறிமுகம் இல்லாமலே இன்னொருவர் மூலமாக - காற்றில் வரும் கீதத்தைப் போன்று தற்செயலாக - நமக்கு அறிமுகமாகும்.

ஆக அறிமுகம் எதுவாயினும் - நம் அறிவில், சிந்தனையில் உயரும் முகமாக அந்த அறிமுகம் அமையுமாயின், மேலும் இதுவரை இவரை அடையாளம் கண்டுகொள்ளாமல் விட்டோ மே என்ற மனக்கிலேசத்தை நம்முள் அந்த அறிமுகம் ஏற்படுத்துமாயின், அவரைப் பலருக்கு அறிமுகப்படுத்த நாம் தயங்கமாட்டோ ம். இந்த அறிமுகமும் அதுபோன்றதுதான். அறியாதவர்களுக்கு வேண்டுமாயின் இது அறிமுகமாக இருக்கலாம். அறிந்தவர்களுக்கோ
'குமிண்சிரிப்பு' முகம்.

இலக்கியச் சிந்தனை கூட்டமொன்றில் ஸ்ரீரங்கம் திரு. மோகனரங்கன் அவர்கள், 'திருலோக சீதாராமின் படைப்புகள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அந்தச் சிறப்புரையை நான் கேட்டகணம் முதல் என் மன உலகுக்கும் அறிமுகமானார் திருலோக சீதாராம் அவர்கள். அவரை மேலும் அறியும் ஆவலை, தன் சிறப்புரையால் ஏற்படுத்தினார் திரு. மோகனரங்கன் அவர்கள்.

திரு. மோகனரங்கன் அவர்களின் சிறப்புரையிலிருந்து...

கோவையில் அவினாசி ரோட்டில் திருலோக சீதாராம் அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கையில், புகழ்பெற்ற பெரிய மனிதரின் மாளிகையொன்றில், 'இங்கே யாருக்கும் பேட்டியோ, எந்தவித உதவியோ, நன்கொடையோ, சிபாரிசுக் கடிதமோ, ஒரு டம்ளர் தண்ணீரோகூடக் கிடைக்காது. வீணில் காத்திருந்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்!' என்ற புத்திமதி விளம்பரம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு அந்த மனிதரைக் காண ஆவல்கொண்டார் திருலோக சீதாராம். வாயில் காவலரோ அவரை வழிமறித்து ஒரு நீண்ட நமுனாவை எடுத்து நீட்ட, அதில் பார்க்க விரும்பும் காரியம் என்ற பகுதியும் இருந்தது. அந்தப் பகுதிக்கு நேரே, 'சும்மா!' என்று எழுதி அனுப்பினார். 'சும்மா!' நம்மை பார்க்க விரும்புகிறாரா ஒருவர் என ஆச்சரியப்பட்ட அந்தப் பெரிய மனிதர், திருலோக சீதாராமை உள்ளே அனுப்பிவைக்குமாறு வாயிற்காப்போனுக்கு அனுமதி வழங்கினார். நேரே உள்ளே வந்த திருலோக சீதாராம் அந்தப் பெரிய மனிதரைப் பார்த்தார். பின்னர் உடனேயே கிளம்பிவிட்டார். இதைக் கண்ணுற்ற அந்தப் பெரிய மனிதர், 'வந்தீர்கள். பேசக்கூட இல்லை. உடன் கிளம்புகிறேன் எனக் கூறுகிறீர்களே!' என ஆச்சரியப்பட, திருலோக சீதாராம் அந்தப் பெரியவரிடம், 'உங்களுக்கு எப்படி நேரம் பொன்னானதோ, எனக்கும் நேரம் பொன்னானதுதான். உங்களைப் பார்க்க விரும்பினேன், பார்த்துவிட்டேன். கிளம்புகிறேன்!' எனப் பதிலளிக்க, அந்தப் பதிலினால் கவரப்பட்ட அந்தப் பெரிய மனிதர், பின்னர் அவருடைய நெருங்கிய நண்பரானார்.

நெருங்கிய நண்பரானபின்னர் ஒருமுறை திருலோக சீதாராமுக்கு அவர், 'நீண்டகாலமாக நாம் சந்திக்கவே இல்லை. இந்தப் பக்கம் தாங்கள் வரக்கூடுமானால், சில சொந்த விஷயங்களைக் கலந்தாலோசிக்க விரும்புகிறேன். வருமுன் தகவல் தெரிவித்துவிட்டு வரவும்!' எனக் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்டார். சீதாராமும் தான் வரும் விவரத்தை அவருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டு அவரைக் காண விரைந்தார். இவர் சென்ற சமயம், அந்தப் பெரிய மனிதர் வெளியில் சென்றிருந்தார். நண்பகலில் நண்பர்களுடன் வந்த அவர், பின்னர் அவர்களை அனுப்பிவிட்டு கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு வந்து சீதாராம் அவர்களின் அருகில் அமர்ந்து, இதை உங்கள் சொந்த உபயோகத்துக்கு
வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி, சீதாராம் அவர்கள் கொண்டுசென்றிருந்த பையிலிருந்து உடைகளை வெளியே எடுத்துவிட்டு உள்ளே நோட்டுகளைத் திணித்ததுடன் பழையபடியே உடைகளை மேலே வைத்தடுக்கி பையைக் கொடுத்ததுடன் இரண்டு நாட்கள் இருந்துவிட்டுச்
செல்லலாமே என்றார். அவர் இப்படிச் சொன்னதுதான் தாமதம். உடன் சீதாராம் அவர்கள் அந்தப் பையை கையில் எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாரானார். நான்தான் இரண்டு நாள்கள் இருந்துவிட்டுப் போகலாம் என்றேனே என அந்தப் பெரியவர் கேட்க, அதற்கு சீதாராம் அவர்கள், 'சும்மா இரு என்றிருந்தால் நான் இருந்திருப்பேன். இப்போதோ சுமையை ஏற்றிவிட்டீர்கள். இனி என்னால் ஒருக்கணமும் இங்கே இருக்க இயலாது. நான் இப்போதே ஊருக்குக் கிளம்புகிறேன்' எனக்கூறி புறப்பட்டார். அந்தப் பெரிய மனிதரும் சரியென்று சீதாராமை வழியனுப்பி வைத்தார்.

அவர் - தொழில்மேதை ஜி.டி. நாயுடு அவர்கள். சீதாராமிடம் பின்னர் சிலர் உடனே ஏன் அவர் வீட்டிலிருந்து புறப்பட்டீர்கள் எனக் கேட்டார்கள். அதற்கு சீதாராம், 'மனித மனம் எக்கணம் மாறும் என்று சொல்லமுடியாதே!' என நகைச்சுவையாகக் குறிப்பிட்டாராம்.

திருலோக சீதாராம் 'சிவாஜி' என்ற தலைப்பில் 'Illustrated Weekly' அளவில் பத்திரிகையொன்றை நடத்திவந்த காலகட்டம். அச்சமயம் எழுத்தாளர் திரு. ஜானகிராமன் அவர்களும் 'சிவாஜி' பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். அச்சமயம் நடந்த சுவாரஸ்ய நிகழ்வொன்றைக் காண்போம்.

'சிவாஜி'யின் ஒரு இதழைத் தயாரிக்க அக்காலத்தில் ரூ.25/- வரை செலவாகுமாம். ஒருமுறை இதழைக் கொண்டுவருவதற்கான நிதி கைவசம் இல்லாததால், இம்மாதிரி இக்கட்டான தருணங்களில் உதவும் தூரத்து நண்பர் ஒருவரை கையில் ஒருசில அணாக்களை மட்டுமே வைத்துக்கொண்டு இருவரும் பார்க்கச் சென்றனர். இவர்கள் துரதிருஷ்டம், அந்த நண்பர் இவர்கள் சென்ற சமயம் ஊரிலில்லை. இவர்கள் கைவசம் எடுத்துச்சென்றதோ
ஒருசில அணாக்கள் மட்டுமே. இப்போதோ ஊருக்குத் திரும்பவேண்டும். என்ன செய்வது? அடுத்த இதழை எப்படிக் கொண்டு வருவது? ஊருக்கு எப்படித் திரும்பிச் செல்வது? என்ற சிந்தனையிலேயே இருவரும் நடந்துவந்தனர். அச்சமயம் ஒரு சுமைதாங்கியைக் கண்ட திருலோக சீதாராம் ஜானகிராமனிடம், 'என்னை அந்தச் சுமைதாங்கி கல்லின்மீது ஏற்றிவிடேன்!' எனக் கூறினார். ஜானகிராமனோ அவரிடம், 'ஊருக்குச் செல்வதற்கான
வழியை யோசிக்காமல் இப்படி விளையாடுகிறீர்களே!' என்று கூறியவண்ணமே, சுமைதாங்கிக் கல்லில் ஏற்றிவிட்டார். சீதாராம் அவரிடம், 'பின்னாலேயே வழிவரும். நீ போய், இருக்கும் இந்த அணாவுக்கு வேர்க்கடலை வாங்கிவா!' எனப் பணித்தார். அவரும் வாங்கிவர, பின்னர் இருவரும் வேர்க்கடலையை கொறிக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரம் சென்றிருக்கும். தூரத்தில் ஒரு கூட்டம் வந்துகொண்டிருந்ததைப் பார்த்த சீதாராம் ஜானகிராமனிடம், 'அது என்ன கூட்டம்?' எனக் கண்டுவாருங்களேன் என வேண்டினார். திரும்பிவந்த ஜானகிராமன், வந்துகொண்டிருப்பது பாரதிதாசனின் புகழைப் பரப்பும் கூட்டம் எனக் கூறினார். இப்போது சீதாராம் ஜானகிராமனிடம், அந்தக் கூட்டம் அருகில் வருகையில் நான் பாட ஆரம்பிப்பேன். கூட்டத்திலிருந்து யார் வந்து என்னைக் குறித்துக் கேட்டாலும் நீங்கள் எதுவும் பேசாதீர்கள். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டு, கூட்டம் அருகில் வரும்வரை காத்திருந்துவிட்டு, பின்னர் தனது ஏற்றமிகு குரலால் கணீரென பாரதிதாசனின் பாடலைப் பாட ஆரம்பித்தார். இப்பாடலைக் கேட்ட கூட்டத்திலிருந்த சிலர் சீதாராமின் குரலால் கவரப்பட்டனர். அதில் சிலர் ஜானகிராமனை நெருங்கி, 'யார் இவர்?' எனக் கேட்டனர். ஜானகிராமன் சீதாராம் முன்னரே கேட்டுக்கொண்டபடி வாயைத் திறக்கவில்லை. எனவே, வந்தவர்கள் அவர் பாடி முடிக்கும்வரை காத்திருந்தனர். அவர் பாடி
முடித்ததுதான் தாமதம். வந்தவர்கள் அவரிடம், 'இவ்வளவு அருமையான குரலை வைத்துக்கொண்டு தனியாக ஏன் சாதகம் செய்யவேண்டும்? கூட்டத்தில் வந்து பாடினால் அனைவரும் புத்துயிர் பெறுவார்களல்லவா?' என நயமோடு கேட்டனர். சீதாராம் அவர்களிடம், 'நான் வந்து கூட்டத்தில் பாடவேண்டுமானால் நீங்கள் ஒரு நிபந்தனைக்கு உடன்படவேண்டும். சம்மதமா?' என அவர்களைக் கேட்டார். 'என்ன நிபந்தனை?' எனக்
கேட்டார்கள். 'நான் கூட்டத்தில் பாடவேண்டுமானால், பாடல்களைப் பாடி முடித்தபின்னர், முடிவில் நீங்கள் தட்டு கலெக்ஷனை மேற்கொண்டு அதில் வரும் தொகை முழுவதையும் எனக்குக் காணிக்கையாகத் தரவேண்டும்!' என்றார். அவர்களும் சம்மதிக்க, முடிவில் சீதாராம் அவர்களுக்கு தட்டு கலெக்ஷன் மூலமாகக் கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.52/- இவ்விதம் கிடைத்த அந்தத் தொகையின் மூலம் ஊருக்குத் திரும்பியதோடு அல்லாமல் அவ்வாரத்திய சிவாஜி இதழையும் சீதாராம் கொண்டு வந்தார்.

'எதற்கும் கலங்கக் கூடாது. இயற்கை நமக்கான வழிகளை எப்போதும் திறந்தே வைத்திருக்கிறது. அதை எதிர்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும்!' என்பதை வாழ்ந்தே காட்டியுள்ளார் திருலோக சீதாராம் அவர்கள்.

திருலோக சீதாராம் அவர்களின் வாழ்வியலில் இருந்து சில நிகழ்ச்சிகளை உங்கள் மனக்கண் முன்னே கொண்டுவந்து ரசித்தீர்கள். வாழ்க்கையைக் குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் அவர் கொண்டிருந்த எண்ணங்கள் என்னவென்பதை நீங்கள் அறியவிரும்பினால் அடுத்து வெளியிடும் கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன்.

Saturday, December 30, 2006

ஏகாதசியும் துவாதசியும்...

வைகுண்ட ஏகாதசியில் வரும் சொர்க்க வாசல் திறப்பு ஏழு வாயில் கதவுகளைக் கடந்தபிறகே நடத்தப்படுவதற்குக் காரணமென்ன?

ஏகாதசியில் சிறப்புற்று விளங்குவது வைகுண்ட ஏகாதசி. பெரும்பாலானவர்கள் முன்பெல்லாம் எல்லா ஏகாதசிகளிலுமே உபவாசம் இருந்தனர். இப்போது நடைமுறையிலோ வைகுண்ட ஏகாதசி அன்றாவது உபவாசம் இருப்போம் என்றாகியிருக்கிறது. இந்நாளில் ஆலயங்களில் 'சொர்க்க வாசல் திறப்பு' என்றொரு நிகழ்ச்சி நடத்தப்பெறும். இச்சமயம் ஆலயத்தின் வடக்குப்புற விசேஷமான ஏழு வாயில் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படுகின்றன. இவைகளைக் கடந்த பின்னரே பரமபத வாசனைத் தரிசிக்க இயலும். ஏன் இப்படி? ஏனெனில் தேகமே இங்கு ஆலயமாகப் பார்க்கப்படுகிறது. நம் தேகத்தில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. மூலாதாரம் எனப்படும் சக்கரம் நிலத்தோடு சம்பந்தமுடையது. இச்சக்கரம் முதுகெலும்பு முடிவுறும் இடத்தில் அமைந்துள்ளதாகக் கூறுவர். அடுத்து சுவாதிஷ்டானம் எனப்படும் சக்கரம் நீரோடு சம்பந்தப்பட்டது. இது தொப்புளுக்குக் கீழே நான்கு இன்ச் தள்ளி அமைந்துள்ளது என்பர். மணிபூரகம் என்ற சக்கரம் தொப்புள் அமைந்துள்ள இடமேதான். இச்சக்கரம்
நெருப்போடு தொடர்புடையது என்பர். அதற்கடுத்தது அனாகதச் சக்கரம் எனப்படும் நெஞ்சு மையம். இது காற்றோடு தொடர்புடையது. அடுத்தது விசுக்திச் சக்கரம். இது தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. விண் எனப்படும் ஆகாயத்தோடு சம்பந்தப்பட்டது இச்சக்கரம். இதனையடுத்ததே பஞ்சபூதங்களையும் கடந்த நிலையான ஆக்ஞா எனப்படும் ஆக்ஞைச் சக்கரம். பஞ்ச பூதங்களையும் அடக்கியாள ஒரு விழிப்பு நிலை வேண்டும். அதற்கு இந்தச் சக்கரம் உதவுகிறது என்பர். இச்சக்கரம் புருவமத்தியில் அமைந்துள்ளது. இதையும் தாண்டினால் வருவது சஹஸ்ராரம் எனப்படும் ஏழாவது சக்கரம். இச்சக்கரம் உச்சந்தலையில் அமைந்துள்ளதாகக் கூறுவர். இந்நிலைக்கு தியானத்தின் மூலம் படிப்படியாக ஒரு சாதகன் உயரும் நிலையில் அவனுக்குத் தெய்வ தரிசனம் கிட்டும் என்பர். இவ்வித நிலையைச் சுட்டிக் காட்டுவதற்கே ஏழு வாயில் கதவுகளைத் தாண்டி இறை தரிசனத்தை வைத்துள்ளனர். எப்படி ஏழாவது வாயிலினுள் நுழையும்போது இறை தரிசனம் நம் கண்ணுக்கு எட்டுகிறதோ அதுபோன்று ஒரு சாதகன் தியான நிலையில் படிப்படியாக மேற்கூறிய நிலைகளைக் கடந்து ஏழாவது நிலைக்கு உயர்கையில் அவனுக்கு இறை தரிசனம் நிச்சயம் என்பதை உணர்த்தவே இப்படியொரு ஏற்பாடு. இனி ஏகாதசி பற்றிய விவரங்களுக்குள் நுழைவோம்.

1. உற்பத்தி ஏகாதசி: ஏகாதசி விரதம் தோன்றக் காரணமான கதை இந்த ஏகாதசியை முன்னிட்டே சொல்லப்படுகிறது. ஏகாதசி உற்பத்தியான தினமாகச் சொல்லப்படும் இந்தத் தினத்தில் விரதமிருப்போருக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்.

2. மோட்ச ஏகாதசி: வைகுந்த வாசனுக்கு மிகவும் பிடித்த ஏகாதசி. இத்தினத்தில் பரமபத வாசல் வழியாகச் சென்று பரந்தாமனை தரிசிப்போருக்கு பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

3. சபலா ஏகாதசி: சம்பாவதி நாட்டு இளவரசனான உலும்பகன் தகாத செயல்கள் செய்ததால், தந்தையாலேயே விரட்டப்பட்டவன். ஒரு சமயம், வேறு நாட்டு சிறையில் அடைபட்ட அவன் அங்கே உணவு ஏதும் தரப்படாததால் பட்டினி கிடந்தான். அன்றைய தினம் சபலா ஏகாதசி தினம் என்பதால் அவனது பாபங்கள் எல்லாம் நீங்கி அவனும் மனம் திருந்தினான். அதன் காரணமாக அவன் தந்தை அவனை மன்னித்து மகுடம் சூட்டி வைத்தார். இந்த ஏகாதசி விரதத்தால் சகல பாவங்களும் அகலும்.

4. புத்ரதா ஏகாதசி: இதன் பெயரே இது என்ன பலனைத் தரும் என்பதை உணர்த்தும். ஆமாம். புத்திர பாக்கியம் தரக்கூடிய ஏகாதசி இது. பத்ராவதி நாட்டு மன்னன் சுகேதுமான் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தே புத்திரப்பேறு பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.

5. ஷட்திலா ஏகாதசி: எல்லாதானங்களும் செய்த ஒரு பெண்மணி, அன்னதானம் மட்டும் செய்யாததால் சொர்க்கத்தில் பசியால் வாடினாள். தேவ மங்கை ஒருத்தி, தான் கடைப்பிடித்த ஷட்திலா ஏகாதசி விரதத்தின் பலனை அவளுக்குத் தர, அதனால் அவள் பசிப்பிணி நீங்கினாள். இந்த விரதத்தினை அனுஷ்டிப்பவர்கள் வீட்டில் உணவுப்பஞ்சமே வராது. மேலும் பிரம்மஹத்தி மற்றும் பசுவதைத் திருட்டால் உண்டாகும் பாவங்களும் நீங்கும்.

6. ஜயா ஏகாதசி: இந்த ஏகாதசி தினத்தில் விரதமிருப்பது வெற்றிகளைத் தரும். அதோடு, குடும்பத்தில் அகால மரணமடைந்தவருக்காக இந்த விரதத்தை அனுஷ்டித்தால் அதன் பலனாக அவருக்கு மோட்சமும் கிட்டச் செய்யும். தேவ சபையில் இருந்த போது மனசஞ்சலம் அடைந்த மால்யவான்-புஷ்பவந்தி தம்பதியர், தேவேந்திரனின் சாபத்தால், பேய் உரு அடைந்தனர். அவர்கள் மீண்டும் வானுலகை அடைய இந்த விரதத்தைக் கடைப்பிடித்தே சாபம் நீங்கினர்.

7. விஜயா ஏகாதசி: விரும்பிய பலனைத் தரும் இந்த தினத்தில் விரதம் இருந்தே, ராவணனை வெல்லும் ஆற்றலை ராமர் பெற்றாராம். எந்தக் கோரிக்கையுடன் விரதமிருக்கிறோமோ அதனை ஈடேற்றும் ஏகாதசி இது.

8. ஆமலகி ஏகாதசி: ஆமலகம் என்பது நெல்லி மரத்தைக் குறிக்கும். நெல்லி மரத்தின் கீழ் கவசம் வைத்து, அதில் ஸ்ரீமந் நாராயணரை எழுந்தருளச் செய்து வலம் வந்து வணங்கிட வேண்டிய ஏகாதசி தினம் இது. இந்த ஏகாதசி விரதத்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனும், புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றில் நீராடிய பலனும் கிட்டும்.

9. பாபமோசனிகா ஏகாதசி: பாவங்களைப் போக்குவதால் இந்த ஏகாதசிக்கு பாபமோசனிகா ஏகாதசி என்ற பெயர் வந்தது. லோமேசர் எனும் முனிவர், தமது தவத்தைக் கெடுக்கவந்த மஞ்சுமதி என்னும் தேவகன்னிகையை பேயாக மாறச் சாபமிட்டார். மன்னித்தருளுமாறு வேண்டி நின்ற மஞ்சுமதியிடம், சித்திரை மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று விரதம் கடைப்பிடிக்கும்படி சொன்னார். அவளும் அப்படியே செய்து பாபம் நீங்கினாள்.

10. காமதா ஏகாதசி: தம்பதியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஏகாதசி இது. இந்த ஏகாதசியின் மகிமையை வசிஷ்டர் திலீபன் என்ற மகாராஜனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

11. வரூதினி ஏகாதசி: இந்த ஏகாதசியை சிவன், மாந்தாதா மற்றும் துந்துமாரன் போன்றோர் கடைப்பிடித்து நலம் பெற்றுள்ளனர். தானப் பலனைத் தரக்கூடியது இந்த ஏகாதசியில் செய்யும் தானம் சிறியதேயானாலும் யிரம் மடங்கு பலனைத் தரவல்லது. பிறவிப் பெருங்கடலைக் கடக்க விரும்புவோர் இந்த ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளலாம்.

12. மோகினி ஏகாதசி: வசிஷ்ட முனிவர் இந்த ஏகாதசியின் சிறப்பை ஸ்ரீராமருக்கு எடுத்துரைத்துள்ளார். அறியாமையைப் போக்கும் ஏகாதசி.

13. அபரா ஏகாதசி: இந்த ஏகாதசியன்று பெருமாளை த்ரிவிக்கிரமராக நினைந்து பூஜிக்கவேண்டும். அபர காரியம் எனப்படும் முன்னோர்களுக்குக் கயையில் பிண்டம் அளிப்பது, பிரயாகையில் புனித நீராடுவது, பத்ரிகாசிரமத்துக்குப் புண்ணிய யாத்திரை மேற்கொள்வது போன்றவற்றால் எந்த அளவுக்கு ஒருவருக்குப் புண்ணியம் கிடைக்குமோ அந்தப் புண்ணியப் பலனைத் தரவல்லது இந்த ஏகாதசி. குருநிந்தை எனப்படும் குருவைத் திட்டி
அவமானப்படுத்துவது போன்ற பெரும்பாவங்களும் இந்த ஏகாதசி விரதத்தால் நீங்கும்.

14. நிர்ஜலா ஏகாதசி: பீம ஏகாதசி என்ற பெயராலும் இந்த ஏகாதசி அறியப்படுகிறது. ஏனெனில் பெருந்தீனி உண்பவனான பீமனே தண்ணீர்கூட அருந்தாமல் உபவாசம் இருந்த ஏகாதசியாதலால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. வேத வியாஸர் பாண்டவர்களுக்கு ஏகாதசி விரதத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து இந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூற, பீமன் மட்டும் சம்மதிக்கவில்லை. என்னால் எல்லா ஏகாதசிகளிலும் விரதம்
இருக்க முடியாது. என்னைப் போன்று பெருந்தீனி உண்பவர்களுக்கு வருஷத்தில் ஒரு முறை உபவாசம் இருந்தாலே போதும் என்பதான ஏகாதசி விரதம் இருந்தால் சொல்லுங்கள் அனுஷ்டிக்கிறேன் என்று கூற, வியாஸர் இந்த நிர்ஜலா ஏகாதசியைத்தான் பரிந்துரைத்தார். இந்த ஏகாதசியில் உபவாசமிருந்தால் மலைபோல் வரும்போல் துன்பங்கள் சடுதியில் மறையும்.

15. யோகினி ஏகாதசி: மார்க்கண்டேய மகரிஷி குபேரனின் பணியாளனான ஹேமமாலிக்கும் அவனது மனைவிக்கும் உபதேசித்த ஏகாதசி. ஒரு முறை குபேரன் சிவபூஜை செய்துகொண்டிருக்கையில் உரிய நேரத்தில் பூக்களைக் கொண்டுசெல்லாமல் மனைவியோடு மெய்ம்மறந்து பேசிக்கொண்டிருந்தான். இதனால் கோபமுற்ற குபேரன் தனது பணியாளனான ஹேமமாலிக்குப் பதினெட்டுவிதமான குஷ்டங்கள் உண்டாகக் கடவது எனச் சபித்துவிட, அத்தம்பதியர் மார்க்கண்டேய மகரிஷியைத் தஞ்சம் புகுந்தனர். இந்த ஏகாதசியை அனுஷ்டித்த ஹேமமாலி குஷ்டரோகத்தினின்று விடுதலை பெற்று, பின்னர் குபேரபுரிக்கே திரும்பினான். இந்த ஏகாதசி குஷ்டரோகத்தை நீக்கும் சிறப்பு வாய்ந்தது.

16. சயினி ஏகாதசி: இந்த ஏகாதசியை சயன ஏகாதசி என்றும் கூறுவர். மகாபலியின் கர்வத்தை அடக்க த்ரிவிக்கிர அவதாரம் எடுத்த மாயவன் பின்னர் மற்றொரு திருமேனி கொண்டு பாற்கடலில் பாம்பணையில் படுத்து உறங்கினான். பரந்தாமன் சயனித்த அந்த ஏகாதசியே 'சயினி ஏகாதசி' எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் தீப தானம் செய்வது சிறந்த பலன்களை நல்கும்.

17. காமிகா ஏகாதசி: இந்த ஏகாதசியில் திருத்துழாய் எனப்படும் துளசி கொண்டு பெருமாளைப் பூஜித்தால் தங்கத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இத்தினத்தில் நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது போன்றவை மிகுந்த புண்ணியத்தை நல்கும்.

18. புத்ர(ஜா)தா ஏகாதசி: தை மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் இப்பெயரே வழங்கப்படுகிறது. இதுவும் புத்திரப் பேற்றை அளிக்கும் ஏகாதசியே. 'பிள்ளை பிறக்காது' என மருத்துவர்களாலேயே கைவிடப்பட்டவர்களுக்கும்கூட நல்ல புத்திர பாக்கியத்தை அளிக்கும் வல்லமை மிக்கது இந்தப் 'புத்ர(ஜா)தா ஏகாதசி.' மஹீஜித் என்ற மன்னன் தனக்கொரு வாரிசு இல்லையே என்றெண்ணி மனம் வாடினான். இதற்குக் காரணம் அவன்
முற்பிறவியில் ஒரு குளத்தில் நீர் குடிக்கச் செல்கையில், அங்கு நீர் குடித்துக்கொண்டிருந்த பசுவை விரட்டிவிட்டுக் குடித்ததுதான் இதற்கான காரணம் என்றறிந்த லோமசர் என்ற முனிவர், அந்த அரசனிடம் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும்படி கூறினார். அரசனும் கடைப்பிடிக்க, அவனும் தந்தையானான் இந்த ஏகாதசி மகிமையால்.

19. அஜா ஏகாதசி: இந்தப் பிறவியில் செய்யும் பாவங்களே நம் மனக்கண் முன்னால் தோன்றி இன்னும் ஏதாவது செய்திருக்கிறோமா எனச் சித்தம் தடுமாறுவோம், நமக்குத் துன்பம் நேர்கையில். இந்நிலையில் சென்ற பிறவியில் செய்த பாவங்கள் எத்தனை எத்தனை என்று பட்டியலிட முடியுமா? அப்படிப்பட்ட சென்ற பிறவிப் பாவங்களையும் சேர்த்து எரிக்கவல்லது இந்த அஜா ஏகாதசி. இதற்குச் சான்றாக விளங்குபவன் அரிச்சந்திரன். எனவே அவனது துயரம் தீர கெளதம முனிவர் இந்த ஏகாதசி வழிமுறையை அரிச்சந்திரனுக்கு உபதேசித்தார்.

20. பத்மநாபா ஏகாதசி: மாநிலத்தில் மழை வேண்டுவோர் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கலாம். சூரிய வம்சத்தவனான மன்னன் மாந்தாதாவின் ஆட்சியில் ஒரு சமயம் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மழை பெய்யவில்லை. எனவே பஞ்சம் தலைவிரித்தாடியது. இத்துயரிலிருந்து நீங்கும் உபாயத்தை ஆங்கீரஸ முனிவரிடம் வேண்டினான். அதற்கு அவர் இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்ளும்படி கூறினார். அரசனும் அவ்விதமே விரதத்தை அனுஷ்டிக்க, வானம் மடை திறந்த வெள்ளம் போல வளம் தரும் மழையைப் பொழிந்தது. இந்த ஏகாதசி விரதம் மேற்கொண்டால் தேசமே சுபிட்சம் பெறும்.

21. இந்திரா ஏகாதசி: பித்ருக்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி இது. மாஹிஷ்மதி நாட்டு மன்னனான இந்திரசேனன் அவன் தந்தை நரகத்திலிருந்து விடுதலை பெறவேண்டி அனுஷ்டித்த ஏகாதசி. ஏகாதசி விரதமிருந்து தந்தைக்கு சிராத்தம் செய்ய, அவர் நரகத்திலிருந்து விடுதலை பெற்று அவனை ஆசிர்வதித்தார். நாரதர் இந்த விரதத்தை அந்த மன்னனுக்கு உபதேசித்தார்.

22. பாபாங்குசா ஏகாதசி: வேதனை என்பது கண்ணுக்குத் தெரியாமல் படும் துயரங்கள். வாதனை என்பதோ கண்ணுக்குத் தெரிந்தே நம்மைத் துயரத்தில் ஆழ்த்தும் விஷயங்கள். இந்த இரண்டையுமே இந்த ஏகாதசி விரதம் நீக்குகிறது. பாவங்களை நீக்கும் அங்குசமாக இந்த ஏகாதசி திகழ்வதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.

23 ரமா ஏகாதசி: முசுகுந்தச் சக்ரவர்த்தியின் மகளான சந்திரபாகா ஒருசமயம் அவள் கணவன் சோபனனுடன் தந்தையைக் காணவந்தாள். அவள் வந்தது ஏகாதசி தினத்தில். விஷ்ணுவின் தீவிர பக்தனான முசுகுந்தன் அந்த ஏகாதசிக் காலங்களில் தம் நாட்டு மக்கள் விரதத்தைக்
கடைப்பிடிக்கவேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாட்டை விதித்திருந்தான். எனவே சந்திரபாகா தம் கணவன் சோபனனிடம், இன்று அவசியம் நாம் விரதம் மேற்கொள்ளவேண்டும் எனக் கூற, தன்னால் அது இயலாதே என சோபனன் தவித்தான். இல்லாவிட்டால் தம் தந்தை தண்டிப்பார் என எடுத்துரைக்க வேறுவழியில்லாமல் விரதமிருந்தான் சோபனன். விரத முடிவில் அவன் உயிர் போய்விட்டது. இந்தத் துக்கம் தாங்காமல் சந்திரபாகாவும் உயிர் நீத்தாள். பின் இருவரும் வைகுண்டத்தை அடைந்தார்கள். மறுபிறவியில் சோமசர்மா என்பவரின் உபதேசப்படி ரமா ஏகாதசி எனப்படும் இந்த
ஏகாதசியை அனுஷ்டித்து வாழ்வில் வளம் பல பெற்றனர்.

24. ப்ரபோதினி ஏகாதசி: இந்த ஏகாதசியில்தான் பகவான் தன் உறக்கத்தை விட்டு எழுந்திருக்கிறார். இந்நாளில் துளசியால் பெருமாளை பூஜிப்பவர்கள் வைகுண்டத்துக்குச் செல்வர். இந்த ஏகாதசியில் துளசியைத் தரிசிப்பது, துளசியைத் தொடுவது, துளசியின் பெயரைச் சொல்வது, துளசியைத் துதிப்பது, துளசியை நட்டு வளர்ப்பது என துளசிக்கு எதைச் செய்தாலும் பல யுகங்களுக்கும் பலனை அளிக்கவல்லது இந்த ஏகாதசி. கார்த்திகை மாதத்தில் வரும் இந்த ஏகாதசியை கெளசிக ஏகாதசி என்றும் கைசிக ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசியில் உபவாசமிருந்தால் 24 ஏகாதசிகள் உபவாசமிருந்த பலன் என்பர். இந்த கெளசிக ஏகாதசி முடிந்த மறுநாள்தான் துளசிக் கல்யாணம் நடக்கிறது.

25. கமலா ஏகாதசி: மகாலட்சுமியின் பரிபூரண அருளைக் கூட்டுவிப்பதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர். சில வருஷங்களில் மட்டுமே அபூர்வமாக வரும் ஏகாதசி இது.

இவ்வளவு தூரம் விளக்கியதையே கீழே சுருக்கமாக...

மார்கழி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - உற்பத்தி ஏகாதசி
மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி என்றும் கூறுவர்)
தை மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - ஸபலா ஏகாதசி
தை மாத சுக்லபக்ஷ ஏகாதசி - புத்ரதா ஏகாதசி
மாசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - ஷட்திலா ஏகாதசி
மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - ஜயா ஏகாதசி
பங்குனி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - விஜயா ஏகாதசி
பங்குனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - ஆமலகி ஏகாதசி
சித்திரை மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - பாபமோசனிகா ஏகாதசி
சித்திரை மாத சுக்லபக்ஷ ஏகாதசி - காமதா ஏகாதசி
வைகாசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - வரூதிநி ஏகாதசி
வைகாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - மோகினி ஏகாதசி
ஆனி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - அபரா ஏகாதசி
ஆனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - நிர்ஜலா ஏகாதசி
ஆடி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - யோகினி ஏகாதசி
ஆடி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - சயினி ஏகாதசி (மஹாவிஷ்ணு சயனிக்கும் நாள்)
ஆவணி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - காமிகா ஏகாதசி
ஆவணி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - புத்ரதா ஏகாதசி
புரட்டாசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - அஜா ஏகாதசி
புரட்டாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - பத்மநாபா ஏகாதசி
ஐப்பசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - இந்திரா ஏகாதசி
ஐப்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - பாபாங்குசா ஏகாதசி
கார்த்திகை மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - ரமா ஏகாதசி
கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசி- ப்ரபோதினி ஏகாதசி (மஹாவிஷ்ணு விழிக்கும் நாள்)

அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு 'கமலா ஏகாதசி' என்று பெயர்.

ஏகாதசி விரதம் மேற்கொள்கையில் எதற்குக் கண்விழிக்க வேண்டும்?

ஏகாதசி தினத்தன்று இரவு கண்விழித்து முழித்திருப்பதற்கு மெய்ஞ்ஞான ரீதியில் மட்டுமல்ல விஞ்ஞான ரீதியாகவும் காரணங்கள் உள்ளன. அன்று முழுவதும் உண்ணாமல் உபவாசமிருந்தால் இயற்கையாகவே தேக உஷ்ணம் அதிகரிக்கும். மேலும் இரவு கண்விழிப்பதாலும் உடல் உஷ்ணம் அதிக அளவில் அதிகரிக்கும். இவ்விதம் உருவாகும் இந்த வெப்பத்தால், நாம் ஏற்கெனவே உட்கொண்ட உணவுகள், நீர், காற்று இவைகளின்
வாயிலாக நம் உடலில் சேர்ந்த நுண்ணிய நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு நம் உடல் பரிசுத்தமாகிறது. இதை ஏன் மற்ற நாள்களில் மேற்கொள்ளக்கூடாது? ஏகாதசி அன்று மட்டும் ஏன் செய்யச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் கூறியுள்ளனர் நம் முன்னோர்கள். ஏகாதசி அன்று சந்திரனின் கதிர்கள் நம் உடலில் பாய்ந்து அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக அன்றைய தினத்தில் நமது ஜீரண உறுப்புகள் சந்திரனின் கதிர்வீச்சால் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலேயே அன்றைய தினம் உபவாசம் மேற்கொள்ளச் சொல்கிறார்கள்.

துவாதசி அன்று அகத்திக்கீரையை முக்கியமாக உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்வதற்குக் காரணம் என்ன?

இதுவும் முன்னோர்களின் ஏற்பாடுதான். ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சாத்திரம் வலியுறுத்துகிறது.

அகத்திக்கீரையை துவாதசியன்று உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்வதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. ஏகாதசி அன்று மேற்கொண்ட உபவாசத்தால் உடலில் உஷ்ணம் எழுந்து பின்னர் தணிந்து மறுநாள் சமநிலைக்கு வரும். அச்சமயத்தில் அகத்திலும் எழும் தீயை அணைக்கவே இந்த அகத்திக்கீரை பயன்படுத்தப்படுகிறது. அகம்+தீ+கீரை = அகத்திக்கீரை. பெயர்ப் பொருத்தமுள்ள கீரை என்பது இதிலிருந்தே உங்களுக்குப்
புரிந்திருக்கும்.

Peptic Ulcer எனப்படும் குடற்புண்களுக்கு இக்கீரை சிறந்த வரப்பிரசாதி. நரம்புத்தளர்ச்சியை நீக்கும் இக்கீரையில் வைட்டமின் 'ஏ' சத்தும், இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் மற்றும் தாதுப்பொருள்களும் அதிகளவில் உள்ளன. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகச் சிறந்த ஒளஷதம். இவ்வளவு சிறப்புகளா என எண்ணி இந்தக் கீரையை அடிக்கடி உபயோகிக்க ஆரம்பித்தால் வாயுக்கோளாறுகள் வரும். எனவே மருந்தாக மட்டுமே கருதி இக்கீரையை பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை அதாவது துவாதசியில் உணவில் சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும். அடுத்து நெல்லிக்காயை ஏன் சேர்க்கிறோம் என ஆராய்ந்தால் அதுவும் உடல் வெப்பத்தை குறிப்பாக கண்களின் வெப்பத்தைத் தணிக்கிறது
என்கிறார்கள். நெல்லிக்காயை தினமும் பயன்படுத்தி வரலாம். இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் கூடும். எனவேதான் நெல்லிக்காய்.

பின் சுண்டைக்காய் எதற்கு? குடலில் அவ்வப்போது உண்டாகும் கிருமிகளை அழிக்கவும் மீண்டும் தோன்றாமல் தடுக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது. மேலும் குடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் சுண்டைக்காயைப் பயன்படுத்தலாம். துவாதசி அன்று அகத்திக்கீரையுடன் சுண்டைக்காயும் சேர்ப்பதால் குடல் பரிபூரண சுத்தம் பெறுகிறது. மொத்தத்தில் நம் உடலில் சேரும் கிருமிகளை அழிக்க ஏகாதசி விரதம் மேற்கொண்டு, துவாதசியன்று மேற்சொன்ன இம்மூன்றினாலும் கிருமிகளின் மீது மும்முனைத் தாக்குதல் நடத்தினால் கிருமிகள் மீண்டும் நம்மை அண்டவே நடுங்கும் என்பதால் இப்படியொரு ஏற்பாடு.

Tuesday, November 14, 2006

எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி:

முத்துக்குளிக்க வாரீகளா?

வல்லிக்கண்ணனின் கடிதங்கள் என்ற நூலின் பின்புற அட்டையில் வல்லிக்கண்ணனின் கவிதை ஒன்று இடம் பிடித்திருக்கும். அந்தக் கவிதை, மாணிக்கம். என்னிடமுள்ள குப்பைக் கூளங்களுக்குள் அது எங்கே ஒளிந்திருக்கிறது என்பது இச்சமயம் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, அவரது கட்டுரை நூலான 'முத்துக்குளிப்பு' என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கே உங்கள் பார்வைக்கு விருந்தாக வைக்கிறேன். அதே சமயம் இன்று குழந்தைகள் தினமும்கூட. ஒரே கல்லில் இருமாங்காயாகவும் இந்தக் கட்டுரை விளங்குவதை நீங்கள் படித்து முடிக்கையில் உணர்வீர்கள்.

ஒரு கதை.

இரண்டு சிறுவர்கள் ஓர் இடத்துக்குப் போய்விட்டு திரும்பி வந்தார்கள். அவர்களிடம் 'விசேஷம் ஏதாவது உண்டா?' என்று பெரியவர் ஒருவர் கேட்டார்.

'ஒன்றுமில்லை' என்று ஒருவன் சொன்னான். மற்றொரு சிறுவன் உற்சாகத்தோடு கூறினான்.

'வழியில் பல அதிசயங்களை நான் பார்த்தேன். ஒரு மரத்தில் முன்பு இலைகளே நிறைந்திருந்தன. இப்பொழுது ஓர் இலைகூட அதில் இல்லை. சில செடிகளில் புதிது புதிதாகப் பூக்கள் பூத்து ஜோராக இருந்தன. வண்டி ஒன்று மெதுவாகப் போயிற்று. மாட்டின் கழுத்தில் புண் ஏற்பட்டிருந்தது. இரக்கம் இல்லாமல் அடிக்கிறானே என்று எனக்கு வருத்தம் உண்டாயிற்று...'

- இவ்வாறு அந்தப் பையன் விவரித்துக்கொண்டே போனான். பெரியவர் அவனைப் பாராட்டினார்.

பல விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் பண்பு ஒவ்வொருவருக்கும் தேவை. அது 'அவதானிகை' எனப்படும். இதை 'அறியும் அவா!' என்றும் சொல்லலாம். 'வழியே போய் வழியோடு திரும்புவதை விட்டுவிட்டு பராக்குப் பார்த்துக்கொண்டு போன பையனைப் பாராட்டியது தப்பு!' என்று சில பெரியவர்கள் சொல்லக்கூடும்.

என்ன நடக்கிறது என்று அறியவேண்டும் என்ற ஆசையோடு அங்குமிங்கும் பார்க்கிற பையன்களின் காதைப் பிடித்துத் திருகும் உபாத்தியாயர் ஒருவர் இருந்தார். காதைக் கவனிப்பதோடு அவர் விட்டுவிடுவாரா என்ன? 'கையை முறிக்க வேண்டும்' என்ற ஆசையோடு அவர் 'இம்போசிஷன்' வேறு எழுதச் சொல்லுவார். அறியவேண்டும் என்கிற ஆசை பூனையைச் சாகடிக்கிறது! `Curiosity kills the Cat!' என்று முன்னூறு, நானூறு தடவைகள்
எழுதிக்கொண்டு வரும்படி செய்வார்.

இத்தகைய பெரியவர்களைப் பற்றித்தான், 'தாத்தாவும் பேரனும்' எனும் புத்தகத்தில் வரும் அனுபவஞானியான ஒரு தாத்தா குறிப்பிடுகிறார்.

'பெரும்பாலானவர்கள் நோக்குகிறார்கள்; ஆனால் ஒருபோதும் எதையும் பார்ப்பதில்லை. பெரும்பாலோர் கண்கள் திறந்திருந்தும் குருடராய் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். சிஞ்ச் பூச்சி முதல் இப்பி வரை எதுவும் நீ அதை உண்மையாகவே கவனித்து, அதுபற்றிச் சிந்தித்தால்,
சுவாரஸ்யமானதுதான். ஆராயும் ஆவல் அறிவுக்கு அவசியமானது. அறிந்துகொள்ளும் ஆவல் ஒருபோதும் பூனையைக் கொன்றதில்லை. மந்தபுத்தியால் பூனை செத்திருக்கும் அல்லது எலிகளை அதிகம் தின்றதால் இருக்கலாம்.'

ஒவ்வொரு பொருளையும் நன்கு கவனித்து அதுபற்றி எண்ணினால், ஒவ்வொன்றும் ஓர் அற்புதம் என்பது விளங்கும்.

வண்டி அற்புதப் பொருளாம், வண்டி மாடு அற்புதப் பொருளாம். வண்டி பூட்டும் கயிறு, அதுவும் அற்புதப் பொருளாம் என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியிருக்கிறார்.

கவிகளுக்கு மட்டும்தான் எல்லாம் அற்புதப் பொருள்களாகத் தோன்றும் என்பதில்லை. ஒவ்வொன்றிலும் அற்புதத்தைக் காணும் பசுமை மனோபாவம் சிறு பிள்ளைகளுக்கும் இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள், 'ஏன்? ஏன்?' என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

குழந்தைகளின் கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை, அவர்களுக்குத் திருப்தி தரும் விதத்தில், சொல்ல முடியாதபோது அல்லது சொல்வதற்குப் பொறுமை இல்லாதபொழுது, பெரியவர்கள் எரிந்து விழுகிறார்கள், ஏசுகிறார்கள். 'என்ன இது, சும்மா தொண தொணத்துக்கொண்டு!' என்று கோபித்து, முதுகில் இரண்டு 'பூசைக் காப்பு'ம் கொடுக்கிறார்கள். இதனால் நாளடைவில் குழந்தைகளின் உள்ளம் வறண்டு போகிறது.

பெரியவர்கள் பதில் சொன்னால் சொல்லட்டும். சொல்லாது போனால் போகட்டும் என்ற தன்மையில் 'ஏன் இது இப்படி இருக்கிறது? ஏன் அது இவ்வாறு தோன்றுகிறது? ஏன் இது வேறுவிதமாக இல்லை?' என்று ஓயாது கேள்விகளை எழுப்பி, தாங்களாகவே விடை காண முயலும் சிறுவர், சிறுமியரும் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளம் சதா உணர்வுத் துடிப்போடு திகழ்கிறது.

'இது இப்படித்தான் இருக்கும். எல்லாம் அதனதன் இயற்கை!' என்று பெரும்பாலாரைப் போல, அறிவுக் குறுகுறுப்பு பெற்றவர்களும் எண்ணி, தங்கள் காரியங்களைச் செய்துகொண்டு போயிருந்தால், அறிவு வளர்ச்சி ஏற்பட்டிராது. 'ஏன் இப்படி? இது ஏன் இப்படி இல்லை?' என்ற கேள்விகளே ஆராய்ச்சிக்கு அஸ்திவாரமாகும்.

Saturday, November 11, 2006

விடு தலை..?

சுதந்திரம் என்பது என்ன?

சுதந்திரம் என்பது தான்தோன்றித்தனமாகத் திரிவதா அல்லது கட்டுப்பாடுகளுக்குள் கட்டுண்டு கிடப்பதா?

'சுதந்திரம்' என்ற பேச்சை எடுத்தாலே நமக்கெல்லாம் பொதுவாகத் தோன்றுவது ஒரு விடுதலை உணர்வே. விடுதலை உணர்வு என்று கூறும்போதே சிறைபட்டுக் கிடக்கும் உணர்வும் நமக்குள் இருப்பதை அது மறைமுகமாக உணர்த்துகிறது.

நமக்குள்ளேயே ஏன் நாம் சிறைப்பட்டிருக்க வேண்டும்? இதற்குக் காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருப்போமா? இப்போது யோசிப்போம்.

மீண்டும் 'சுதந்திரம்' என்பது என்ன என்ற கேள்விக்கே வருவோம்.

'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
இந்த உலகத்தில் போராடலாம்.
நிலை உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!'

- என்ற பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். அந்தப் பாடல் சுதந்திரம் என்றால் என்ன என்பதை அழகுற உணர்த்தி நிற்கிறது.

'உன்னையே நீ அறிவாய்!' என்ற அந்த வாழ்வியல் வாசகத்தில்தான் உனது சுதந்திரமே, உனது உண்மை வாழ்வே அடங்கியுள்ளது என்பதை அந்தப் பாடல் வலியுறுத்துகிறது. உனது நிறை - குறைகளை நீ அறிந்துகொள்ளும்போதுதான் பிறரது நிறைகுறைகளும் உன்னைப் பெரிதாகப் பாதிக்காதவண்ணம் நீ சுதந்திரமாகப் பீடுநடை போட முடியும்.

ஆக சுதந்திரம் என்பது தன்னை உணர்தல். தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுதல் என்பது இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும். இப்போது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எவ்விதமான சாதக, பாதக செயல்களையும் செய்யலாமா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க இயலாத ஒன்று.

இதற்கு பிளேட்டோ கூறும் பதில் இதுதான் - 'விவேகமுள்ளவனே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறான்!'

'விவேகமுள்ளவன் கல்விப் பயிற்சியினாலும், கூர்ந்த மதி நுட்பத்தினாலும் சூழ்நிலைக்கேற்பத் தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டுவிடுகிறான். அவனுக்கு எத்தகைய நிர்ப்பந்தமும் தோன்றுவதில்லை. அப்படி ஏதாவது நிர்ப்பந்தம் இருக்குமாகில், அதுகூட அவனுடைய நெஞ்சத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஏதோ ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்; அதுவே அவனைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்! நன்மை தீமைகளை
அறிந்துகொள்ளும் திறன் அவனிடம் உண்டு. அதனால் அவனால் தீயவற்றை விலக்கி, நன்மைகளை நாடும் வழியில் வாழ முடிகின்றது. சர்வ விவேகியான ஆட்சியாளனும்கூட இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும். ராஜாங்கத்தின் குடிமக்களிடம் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும். நன்மை தீமைகளை நன்றாகத் தெரிந்து நடக்கவேண்டும். சாதாரணப் பிரஜை முழு அளவுக்கு விவேகியாக இருக்கமாட்டான். பொதுவாக, அவன் அறியாமை மிக்கவனாகவே இருப்பான். சில சமயம், அவனுக்கு நல்ல வழி எது என்பது தெரிந்திருக்கும். ஆனால் அலட்சிய புத்தியாலும், இன்பத்தின்பால் அதிக ஆசை கொள்வதாலும் அவன் அவ்வழி செல்லாதிருப்பான். விவேகியான ஆட்சியாளன் பிறப்பிக்கும் ஆணைகள் அனைத்தும் அவனுக்கு அருவருப்பாகவும் அடக்குமுறையாகவும் தோன்றும். ஆயினும், இது தவிர்க்க முடியாதது!' என இராஜாங்கமும் சுதந்திரமும் என்ற தனது ஆய்வு நூலில் கொடுமுடி இராஜகோபாலன் சொல்லிச் செல்கிறார். மேலும் அவர் தனது நூலின் முடிவுரையில்,

'சுதந்திரம் என்பதே தார்மீக அனுபவந்தான். ஏனெனில், தீமையை நன்மை வெல்லவும், தனித்தன்மையைப் பொதுமயத்தன்மை வெல்லவும், வேற்றுமையை ஒற்றுமை வெல்லவும் உதவி செய்வதாக அது அமைந்திருக்கிறது என்பதுடன் தனிநபரின் இறுதியான சங்கற்பம் என்பது, மனித வர்க்கத்தின் பொதுநன்மையைச் சாதிக்கவல்ல சங்கற்பமேயாகும் என்று தெரிவிப்பதுடன், ஐக்கியம், அமைதி, பொதுநன்மை ஆகியவற்றுக்கு உதவும்
எதுவும் நல்லதாகும். தனிப் பாகுபாடு, வேற்றுமை, குறிப்பிட்ட பற்று ஆகியவற்றுக்கு உதவும் எதுவும் கெட்டதாகும்!' என உறுதிபடக் கூறுகிறார்.

மேற்கண்ட வகையில் சுதந்திரம் என்பது குறித்துச் சிறிது தெரிந்துகொண்டோம். சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் சுதந்திர பாவத்தைச் சிறிது தெரிந்துகொள்வோமா?

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் சிறைத் தவத்தை மேற்கொண்ட காந்திஜி, சிறையின் சட்டதிட்டங்களை உள்ளது உள்ளவாறே கடைப்பிடித்தார். ஒரு தடவை வார்டன் காந்திஜியிடம், மலங்கழிக்கும் இடங்களைச் சுத்தம் செய்வதற்கு இந்தியக் கைதிகள் இருவரை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ள, 'நீங்கள் சொல்லுங்கள், ஆளை நான் அனுப்புகிறேன்!' என்றவர் சிறிது நேரம் கழித்து வார்டனின் முன்னால் சென்று நின்றார். ஆட்கள் எங்கே என வார்டன் வினவ, 'இதோ நிற்கிறேனே!' எனக் காந்திஜி சிரித்தவாறே பதிலளிக்க, அதற்கு வார்டன், 'நீங்கள் இங்கு கைதி என்பது சரி. ஆனால், வாழ்க்கையில் ஒரு பாரிஸ்டர் அல்லவா? நீங்கள் போய் மலங்கழிக்கும் இடத்தைச் சுத்தம் செய்வதா?' என ஆச்சரியம் ததும்பக் கேட்க, அதற்குக் காந்திஜி -

'நான் ஒரு மனிதன். என்னுடனிருக்கும் சகோதரக் கைதிகளும் மனிதர்களே. எங்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது. மலங்கழிக்கும் இடத்தைக் கழுவுவதை நான் இழிசெயல் என்று கருதவில்லை. இதைச் செய்வதில் எனக்கு வெறுப்பேதும் இல்லை. இதற்கு மாறாக, இதிலும் பழக்கம் இருக்கவேண்டியது அவசியம் என்பதே என் அபிப்பிராயம்' எனப் பதிலளித்தார். இச்சம்பவத்தைப் படிக்கையில் காந்திஜி, 'செய் அல்லது செத்துமடி!'
என்பதையே தனது சுதந்திர பாவமாகக் கொண்டிருந்தார் என்பதை உணர முடிகிறது.

சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிய இந்திய தேசீய ராணுவத்தின் வரலாற்றில் நடந்த உருக்கமான ஒரு நிகழ்ச்சியை இனிக் காண்போம்.

சிறுவர் குழு ஒன்று நேதாஜிக்கு உதவ முன்வர, அச்சிறுவர் குழுவுக்கு பிரிட்டிஷ் படைகள் பர்மா காடுகள் வழியே வருகின்றனவா என்ற வேவு பார்க்கும் வேலை தரப்பட, காட்டுக்குள்ளே அந்தச் சிறுவர் குழு நெடுந்தூரம் சென்றுவிட்டார்கள். திடீரென 'டாங்க்' ஒன்று வரும் ஒலி கேட்க, இவ்விவரத்தைப் படைத்தளத்துக்கு ஓடிப்போய்ச் சொல்லலாம் என நினைத்த அச்சிறுவர்குழுவில் ஒரு சிறுவனுக்கு, செய்தி போய்ச் சொல்லுமுன் 'டாங்க்' போய்ச் சேர்ந்துவிடும் எனத் தோன்றியதால், தங்களிடமுள்ள வெடிமருந்தை இடுப்பில் கட்டிக்கொண்டு 'டாங்க்' வரும் பாதையில் படுத்துவிட்டால், 'டாங்க்' வெடித்துப்போய்விடும் என்ற யோசனை வந்து அதைக் குழுவிலுள்ளவர்களிடம் தெரிவிக்க, அச்சிறுவர் குழுவிலுள்ள அனைவரும் உடனே மரக்கிளைகளை ஒடித்து தம்மை ஒரு சிறுசெடி போல உருமாற்றிக்கொண்டு, வரிசையாக இடுப்பில் வெடிமருந்துகளுடன் படுத்துவிட, டாங்கு அவர்கள்மீது ஏறியதும் அண்டம் வெடிப்பது போன்ற பேரொலியுடன் டாங்குகள் வெடித்துச் சிதற, இப்பேரொலியைக் கேட்ட நேதாஜியின் படைத்தளத்தினர் எச்சரிக்கை அடைந்தனர். தன் படைத்தளத்துக்கு நேரவிருந்த பேராபத்தை, தங்கள் உயிரைக் கொடுத்து எச்சரித்த அந்த அஞ்சா நெஞ்சுடைய இளம் சிங்கங்களுக்குக் கண்ணீரும் கம்பலையுமாக நேதாஜி அஞ்சலி செலுத்தினார். அந்த இளம் சிறார்கள் உள்ளத்தில் விடுதலை என்றால் துணிந்து முடிவெடுப்பதுதான் என்று பதிவாகியிருக்குமோ?! சிறுவர்களின் இந்தச் சுதந்திர பாவத்தை என்னவென்று சொல்லி மாய?

1896-ஆம் வருஷம் விருதை சிவஞான யோகியாரால் 'பாரதி' என்ற பட்டத்தைப் பெற்ற சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்விலிருந்தும் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

'ஹோம்ரூல்' கிளர்ச்சி நடந்த காலத்திலே திலகரது சிஷ்யர்கள் அன்னி பெஸண்டைக் கண்டிப்பதுண்டு. இதை எதிர்த்து சென்னைக் கடற்கரையிலே நடந்த கண்டனக் கூட்டமொன்றில் பாரதியார் பேசுகையில் அன்னி பெஸண்டை 'அவள்' என்று குறிப்பிட, பாரதியின் இச்செயல் அன்னி பெஸண்ட் பக்தர்களுக்கு 'சுருக்'கென்று பட்டது. பாரதி இப்படித் தெரிவிக்கக் கூடாது என அவர்கள் இதை ஆட்சேபிக்க, பாரதிக்கு அடங்காத கோபம் வந்தது. முகம் சிவந்து மீசை துடிதுடிக்க, 'எனக்குத் தெரியும் தமிழ்!' எனக் கர்ஜித்து ஒரு குதி குதித்து பிளாட்பாரத்தை மிதித்து அதிரச் செய்தவண்ணம், 'அன்னை பெஸண்ட் அவள்;அவள்;அவள்' என்று கோபத்தோடு பல தடவை சொல்ல, பக்கத்திலிருந்தவர்கள் எல்லாரும் பயந்துவிட்டார்கள். பெண்மணிகளை 'அவள்' என்று குறிப்பது மரியாதைக் குறைவான பாஷையன்று என்பது பாரதியாரின் எண்ணம்.

பிறிதொரு சமயம், ஸ்ரீ நெல்லையப்பப் பிள்ளைக்கு பாரதியார் எழுதிய கடித வரிகள் இங்கு சற்று சிந்திக்கத் தக்கது.

'நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த, அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை!' - பாரதிக்கு விடுதலை என்பது இப்படியாகத்தான் இருந்திருக்கிறது.

ஒருமுறை நைனிடால் சிறையில் லால்பகதூர் சாஸ்திரி இருந்த சமயம் அவரது மூத்த பெண் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தி வந்தது. அவர் நினைத்திருந்தால் பரோலில் வெளியே சென்று மகளைச் சந்தித்திருக்கலாம். பெற்ற பாசம் அவரைப் பலவாறாக உலுக்கிய போதும் அவர் செல்லவில்லை. என்ன, அவ்விதம் அவர் பரோலில் வெளியே போக விரும்பினால், இனி காங்கிரஸ் வேலைகளில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அரசாங்கத்துக்கு உறுதிமொழி கொடுக்க வேண்டும். இருப்பினும் சாஸ்திரி பரோலில் விடுதலை கோரவேயில்லை. வீட்டிலோ மகளின் நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. சாஸ்திரியோ உள்ளுக்குள்ளேயே குமைந்துகொண்டிருந்தார். பின்னர் சிறை அதிகாரிகளுக்கே அவர்பால் இரக்கம் பிறந்து நிபந்தனையில்லாது பதினைந்து நாள் பரோலில் விடுதலை செய்தனர். இருப்பினும் மூன்றே நாளில் அவர் சிறைக்குத் திரும்பிவிட்டார். காரணம், தந்தையின் முகத்தைக் காணக் காத்திருந்த பெண் போலும்! அவர் வீட்டுக்குச் சென்றதும் உயிரை விட்டாள். குடும்பத்தின் துயர நிலை தாங்காதுதான் மூன்றாம் நாளே சிறைக்குத் திரும்பினார். விடுதலை வேள்விக்கு சாஸ்திரி கொடுத்த முதல் பலி இது. அடுத்து இரண்டாவது பலியாக அவரது நான்கு வயது மகனையும் ஓராண்டிலேயே பலி கொடுத்தார்.

'ஜனநாயக சுதந்திரம்' குறித்த கர்மவீரர் காமராஜரின் சங்கநாதத்தையும் கேட்போமே:

'மனிதன் மானத்தோடு வாழ பொருளாதார வசதி வேண்டும் என்பதை நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பாடம் மிக முக்கியமானதாகும். பணத்துக்கு இன்று ரொம்பப் பலம் இருக்கிறது. பணமா, உயிரா என்றால் பணத்தை விட யாரும் தயாராக இல்லை. எல்லாரும் மனிதனாக வாழவே விரும்புகிறோம். நல்ல உணவு, உடை வசதி, குடியிருக்க வீடு, மோட்டார் இல்லையென்றாலும் சைக்கிள் இவைகளோடு வாழ்க்கை அமைய உழைத்து வருகிறோம். ஆனால் முன்னரே முன்னேறிவிட்டவர்கள், நாமும் அந்தஸ்த்தோடு வாழ விரும்பவில்லை. தகராறு உண்டு பண்ணுகின்றனர். தங்களது ஆதிக்கம் போய்விடும் என்ற பயமும் பொறாமையுமே இதற்குக் காரணமாகும். ஆதலினால்தான், செல்வம் ஒரு பக்கம் குவியாமல் இருக்கவேண்டும் என்கிறோம். இன்றைய ஜனநாயகத்தில் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் அனைவருக்குமே உண்டு. நம்முடைய சமுதாயத்தில் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற மனப்பான்மையே இல்லை. முதலில் இம்மனப்பான்மை வேண்டும். பிறந்தால் பேரின்ப வாழ்வுண்டு என்ற தைரியம் ஏற்படவேண்டும்!'

'சுதந்திரம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாதபோதுதான் சிக்கல் உருவாகிறது!' என்கிறார் மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன்.

'மனிதன் என்பவனுக்கு உரிமைகள் பல இருக்கலாம். ஆனால், சுதந்திரமாகத் தனது உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டிக் கொள்வதென்றால் சமூகம் என்ற அமைப்பே இருக்க முடியாது. இந்த அமைப்பு தேவை என்ற பொறுப்புதான் அவனுக்குச் சங்கிலியாகவும் அமைகிறது. சிந்தனை என்பதே நம்மைச் சுற்றி நாம் அமைத்துக்கொண்டுள்ள வேலி என்றால் நாம் எப்படி ஒரு வேலிக்குள் மகிழ்ச்சியாக இருக்க இயலும்? 'சமூகத்தில்
உரிமை என் சுதந்திரம்' என்று சமூகத்தைப் பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுபவன் சுதந்திரமாகச் செயல்படுவதாக மகிழலாம். ஆனால், பொறுப்பின்றி நடந்துகொண்டதன் பலன்கள் நிச்சயம் தாக்கும். மகிழ்ச்சி என்பது இன்றைக்கு மட்டும் அல்ல, வாழ்வு முழுக்கத் தேவைப்படும் அகராதி. இந்தக் கண்ணோட்டம் இல்லாமல் சுதந்திரம் என்றும், உரிமை என்றும் தவறாகச் செயல்பட்டால் இந்த அமைப்பின் சுவர்களில் எப்படியும் மோதி காயப்படுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்று. சுதந்திரம் என்பது நமக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை. நாம் நமக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரக்கூடிய செயல்களில் ஈடுபட ஓர் அனுமதிச் சீட்டு!' என்கிறார் அவர்.

இறுதியாக விடுதலை என்பதை இரண்டு பொருளில் கொள்ளலாம். ஒரு பிரச்னையிலிருந்து விடுதலை வேண்டுமெனில் ஒன்று தலையை உள்ளே நுழைக்க வேண்டும் (விடு தலை); இன்னொன்று அந்தப் பிரச்னையையே கண்டுகொள்ளாதிருத்தல் - அதாவது, அறிஞர் அண்ணா சொன்னபடி, 'பிரச்னையைச் சாகடிக்க விரும்பினால் அதைக் கிடப்பில் போடுங்கள்!' என்ற பாவனையில் உள்ள ஒதுங்குதல் என்கிற விடுதலை.

உங்களின் விடுதலை மனோபாவம் எதுவோ?!

Friday, November 10, 2006

புன்னகையை இலவசமாகக் கொள்ளுங்கள்!

இலவசம் என்ற வார்த்தை எங்கெல்லாம் பரவிக் கிடக்கிறது எனக் கணக்கிட்டால் இலவசம் இல்லாத இடமே இல்லையென்று சொல்லிவிடலாம். கொசுறை உசிராகக் கொண்ட அடித்தட்டு மக்களிலிருந்து தொடங்கி, வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல்வாதிகள் அனைவரையும் கவர்ந்திரு(ழு)க்கும் தாரக மந்திரம் இலவசம்!

என்ன ஒன்று - இலவசம் இலவசமாகக் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தவர்களே இலவசத்துக்கு ஆளாகப் பறப்பதுதான் இங்கு அதிகம். அதுதான் ஆச்சரியமும்கூட!

சமீபத்தில் வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பொன்றின் தலைப்புகூட - 'புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்!' என்றிருக்கிறது.

இலவசம் எப்படியெல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கிறது என்பதை இந்த வார்த்தையைப் பிரித்துப் பார்த்தாலே நன்கு விளங்கும். இல - இல்லை; வசம் - இருப்பு. அதாவது - இலவசம் என்றாலே நாம் நம் வசத்தை இழந்துவிடுகிறோம் என்பதையே இது மறைமுகமாக உணர்த்துகிறதோ!

(இழ + வசம்) ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெறமுடியும் என்பதே இலவசமாக வந்திருக்குமோ?! தள்ளுபடி என்கிற விஷயம் இதன் குழந்தையோ?!

சரி. இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் விட்டுவிட்டு, நகைச்சுவைக்குப் போவோமா?

'இடியாய் விழுந்துட்டுது. சிரித்துத் தொலையேண்டா!' என ஒருவர் கூறியும் நகைக்காமல் இருந்தால் அதுவும் சிலருக்கு ஒருவித நகைச்சுவைதான். நங்கைக்கு நீங்கள் நகை வாங்கிக்கொடுக்கையில் புன்னகை ஒன்றை அவள் சிந்துவாளல்லவா! அதுவும் நகைச்சுவைதான். எங்களிடம் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை என நகைக் கடைக்காரர் கொடுக்கும் வாக்குறுதியை நினைத்தாலும் நகைப்பு உங்களுக்கு தன்னாலேயே பிறக்கிறதல்லவா? அதுவும் நகைச்சுவைதான்!

எல்லாம் சரி. நகைச்சுவைக்கு எதற்கு இப்பொழுது இந்த முக்கியத்துவம்?

எல்லாம் காரணமாகத்தான்! இயந்திரத்தனமாகிவிட்ட இன்றைய வாழ்வில் நாம் வாய்விட்டுச் சிரிக்கும் தருணங்கள் எத்தனை என எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?

சிரிப்பைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினால் அக்காலத்திய விகடகவியான தெனாலிராமன் பீர்பால் தொடங்கி, சமீப காலத்திய சார்லி சாப்ளின், சந்திரபாபு, நாகேஷ், என்.எஸ்.கே., கவுண்டமணி, செந்தில், விவேக் மற்றும் வடிவேலு வரை இன்னமும் சிரிக்கவைக்கும் பட்டாளங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தாமும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பது என்பது சிலருக்கு மட்டுமே கைவந்த கலை.

சிரிப்புக்கு அப்படி என்ன ஒரு சிறப்பு?

அடிசன் என்ற பெரியார், 'சிரிப்பு ஒன்றுதான் மிருகத்திடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிறது!' என்கிறார். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சிரிப்பதில்கூட கஞ்சத்தனம் கொண்டிருக்கிறோம். உதட்டளவில் மட்டுமே சிரிக்கிறோம்.

இதெல்லாம் சிரிப்பேயல்ல என்று சில பெரியார்கள் சொல்கிறார்கள். 'உரக்கச் சிரித்தால் உள்ளத்தின் வெண்மையைக் காட்டும்!' என அறிஞர் கோல்ட்ஸ்மித்தும், 'நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும்!' என பால்தாக்ரேயும் சிரிப்பைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள்.

சிரிப்பை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பாடலான 'சிரிப்பு வருது, சிரிப்பு வருது' என்ற பாடலொன்றே போதும். சிரிப்பை வரவழைப்பதுடன் நன்கு சிந்திக்கவும் வைக்கும் பாடல் அது.

உள்ளத்து உணர்ச்சிகளை பொதுவாகவே அடக்கிவைக்கக் கூடாது என்பார்கள். ஆனால் சிலரோ, சிரிக்கவேண்டிய தருணங்களிலும்கூட தங்கள் கஷ்டங்களை நினைத்தே சிரிக்காமல் இருப்பதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

பெயரளவில் சிரிப்பதற்கும் உள்ளந்திறந்து சிரிப்பதற்கும் எவ்வளவோ வேறுபாடிருக்கிறது.

ஒரு குமரி உங்களைப் பார்த்துச் சிரிக்கிறாள் எனில், நீங்களும் அவளைப் பார்த்து ஒரு புன்னகையைப் பரிமாறுங்கள். அதை விட்டுவிட்டு, 'அவள் ஏன் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறாள்? இதற்கு நாம் சிரிக்கலாமா, வேண்டாமா? எதற்காகச் சிரிக்கவேண்டும்?' என்றெல்லாம் சிந்தித்து, அச்சமயத்தில் நீங்கள் சிரிக்காமல் விட்டீர்களானால் - அந்தக் குமரியிடமிருந்து நட்பாகட்டும், காதலாகட்டும் எதையுமே பெறமுடியாது. முடிவில் மனக்குழப்பத்துக்கு மட்டுமே உள்ளாகி, துன்பத்தில்தான் ஆழவேண்டியிருக்கும். இங்கு பெயரளவில் சிரித்திருந்தால்கூட இந்த மனத்துன்பம் வந்திருக்காதே! அட! நீங்கள் சிரிக்காததால்தான் உங்களுக்கு மன உளைச்சலா? இதையேகூட துன்பமாக நினைக்காமல் ஓர் அனுபவமாகக் கொண்டு உங்களையே நீங்கள் எண்ணிச் சிரித்திருந்தாலும், பின்னர் தாடி வைக்கும் அளவுக்கு வளராது அல்லவா!

'சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோ ய்!' என்ற பிரபலப் பாடல் இடம் பெற்ற படத்தை மறந்திருக்க மாட்டீர்கள். அதில் சிநேகாவின் அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ், அவருக்குக் கோபம் மற்றும் பதற்றம் வந்தால் அதைத் திசை திருப்புவதற்காக 'ஹா, ஹா, ஹா ஹா!' என தனக்குத்தானே சிரிக்கத் தொடங்குவதைப் பார்த்திருப்பீர்கள். படம் பார்க்கும் நமக்கு, 'இது என்ன இப்படியொரு கேணத்தனமான சிரிப்பு?' என எரிச்சலுடனேயே பார்ப்போம்.

'ஆனால், அது கேணத்தனமான சிரிப்பு இல்லை; அதுவொரு பயிற்சி என்கின்றன!' - சிரிப்புக் கலையைக் கற்றுத்தரும் நகைச்சுவைச் சங்கங்கள். பல்வேறு நகரங்களில் இச்சங்கங்கள் இப்பொழுது இயங்கி வருகின்றன.

இயந்திரத்தனமாகிவிட்ட இன்றைய வாழ்வியல் முறைகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை, நாம் மேற்கொள்ளும் சிரிப்புப் பயிற்சி பெருமளவில் குறைக்கிறதாம். மேலும், சிரிப்பதால் நம் உடலிலுள்ள இயற்கை வலி நிவாரணிகளான என்டார்ஃபின்ஸ்களின் செயல்வேகம் தூண்டப்படுவதால், கீல்வாயு, ஒற்றைத் தலைவலி மற்றும் பல தலைவலிகளால் விடாப்பிடியாக ஏற்படும் வலிகளும் குறைகிறதாம். சிரிப்பினால் நீண்டநாள்களாக இருந்துவரும் பல்வேறுபட்ட நோய்களும் தங்களுக்குப் படிப்படியாகக் குறைந்து வருகிறது என்பதை, இச்சங்கங்களில் பயிற்சி பெற்றுவரும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

சிரிப்பதற்குக்கூட ஒரு சங்கமா என எண்ணியும் நீங்கள் சிரிக்கலாம்.

ஏனெனில், சிரிப்பின் சிறப்பு அப்படி.

'சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்!' என்ற பாடல், நீங்கள் அழுதுகொண்டும் சிரிக்கலாம் அல்லது சிரித்துக்கொண்டும் அழலாம் எனச் சொல்கிறது.

சிரிப்பைக் குறித்து இறுதியாக சில மூதறிஞர்கள் சொல்லியிருக்கும் பொன்மொழிகளையும் பார்ப்போம்:

'மனிதன் தரத்தை அளப்பது என்பது அவன் எதைச் சொன்னால் சிரிக்கிறான் என்பதைப் பொறுத்தது!' என்கிறார் கதே. புல்லரோ, 'மூடன் அதிகமாகச் சிரிப்பான், வஞ்சகன் சிரிக்கவே மாட்டான்!' என்கிறார்.

ஆனால், நயவஞ்சகர்கள்தானே அட்டகாசமாகச் சிரித்தவாறு போஸ் கொடுக்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம். அது வேறு, இது வேறு. 'அங்கே சிரிப்பர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு!' என்பதாக இதைக் கொள்ளவேண்டும்.

இவ்வளவு எதற்கு?

'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்!' என்றொரு முதுமொழிகூட உள்ளதே!

சிரிப்பைக் குறித்து இவ்வளவு சிந்தித்தாயிற்று.

இந்தக் கட்டுரையைப் படித்தும் நீங்கள் சிரிக்கும் வித்தையைக் கைக்கொள்ளவில்லையெனில், நிச்சயம் பரிசு எனக்குத்தான்!

Wednesday, October 25, 2006



விநாயகர் நான்மணிமாலை - சைதை முரளி.

பாரதியார் என்றவுடனே அவரது உருவத்தைவிட சுதந்திர காலகட்டத்தில் மக்களிடையே வீர உணர்ச்சியைத் தூண்டிவிட்ட அவரது தேச பக்திப் பாடல்களும், காதல் சுவையொழுகக் கண்ணம்மாவைக் குறித்துப் பாடிய ஒரு சில பாடல்களுமே நம் உள்ளத்தின்ஆழத்தில் என்றும் நீங்கா நினைவில் இருக்கின்றவையாகும்.

மனதைக் குறித்தும் என்று ஏன் குறிப்பிட்டேன் என்றால் ஒருவருக்கு எல்லா வசதிகளையும்விட, எல்லா நிலபுலன்களையும்விட, எல்லா உறவுகளையும்விட மனம்தான் ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. அறிவைவிட மனமே பிரதானமானதாக இருக்கிறது. ஒரு செயல் நல்ல செயல், தீய செயல் என்று அறிவானது பாகுபடுத்திக் கூறினாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப செயல்படுவதென்னவோ மனம்தான். ஐம்புலன்களின் உள்ளார்ந்த வெளிப்பாடே மனம் என்று கூறிவிடலாம். அப்படியே நாம் தவறே செய்துவிட்டாலும் அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்டும் மனத்தின் சாட்சியாக நின்று செயல்படுவது அறிவுதான்.



அறிவை மனம் வெல்வதற்குக் காரணம் - நாம் ஐம்புலன்களின் வழியே பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட செயல்கள்தான். விளக்கத்தை அறிவானது பெற்றாலும் மீண்டும் மீண்டும் மனிதன் ஏன் தவறிழைக்கவேண்டும்? இதற்குக் காரணம் பழக்கத்தின் பிடியில் மனிதனின் மனம் கட்டுண்டு கிடப்பதால்தான். இதனையே `Habit is the Second Nature' என்று கூறியுள்ளனர்.

மனம் செம்மையாவதற்கே பல ஆன்றோர்களும் சான்றோர்களும் தெய்வீக அருட்பாடல்களையும், பாமாலைகளையும் இயற்றியுள்ளனர். நம் மகாகவி பாரதியாரும் அந்த வரிசையிலே மனம் குறித்துப் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இருந்தாலும் சிறந்து விளங்குவது பக்திப் பாடல்களின் வரிசையில் அவர் இயற்றியுள்ள விநாயகர் நான்மணி மாலையாகும்.

இந்த விநாயகர் நான்மணி மாலையின் மூலம் மனத்தைக் குறித்து அறிந்துகொள்வது என்பது நம் மனத்தை மட்டுமல்லாது பாரதியின் பரந்த மனத்தையும் அறிந்துகொள்வதற்கு ஒப்பாகும்.



பாரதியின் விநாயகர் நான்மணி மாலை அந்தாதி வடிவில் அமைந்துள்ளது. முந்தைய செய்யுளின் இறுதி வார்த்தையினை (அந்தம்) - வார்த்தையின் பொருளினை - அடுத்து வரும் செய்யுள் ஆதியாகக் கொண்டிருக்கும். பாரதியார் இந்த விநாயகர் நான்மணி மாலையில், மனத்தை உணர்ந்துகொண்டு அதை நல்வழிப்படுத்தினால் தெய்வநிலையை அடையலாம் என்பதுடன், தன்னையறிதல் மட்டுமே தெய்வநிலை கிவிடாது. அதனோடு நமக்கும் மேலே ஒரு சக்தி இருந்து நம்மை வழிநடத்துகிறது என்பதையும் நினைவில் கொண்டு, அச்சக்தியைச் சரணடைந்து செயலாற்றினால் தெய்வ நிலை நம்மை தானே வந்தடையும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

பாடலை இயற்றுகின்ற பாவலர் உணர்த்தும் பொருள் எதுவாயினும் அது சிறக்க வேண்டி வாக்கில் வல்லவனாய்த் திகழும் கணபதியே உனக்குத்தான் காப்புச் செய்யுளை உரைப்பர். அதுபோன்று நான் உன்மீது இயற்றும் இந்த நான்மணி மாலைக்கும் நீயே காப்பாக இருப்பாய் எனத் தொடங்கும் பாரதியார்,

'நீயே சரணம்நின் அருளே சரணஞ் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடி வந்தேன்'


எனச் சரணடைகிறார். அவ்விதம் சரணடைந்தவர் அடுத்து கணபதியிடம்,

'செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்
சீர்பெற்றிட நீ அருள் செய்வாய்'


என வேண்டுகிறார். 'செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் உனது செல்வம்' என்ற வைர வரிகள் இவரது பாடலிலிருந்துதான் உருப்பெற்றது போலும். கணபதியே, நான் செய்யும் தொழில் எதுவாயினும் அது உன் தொழில்தான் என்பதை 'செய்யுந் தொழிலுன் தொழிலே காண்' என்ற வரிகளிலேயே கச்சிதமாகச் சொல்லிவிடுகிறார்.




அடுத்து வரும் அகவலில் கணபதியைப் பலவாறாகப் போற்றுபவர் அவனது தாளை - பாதத்தை - கருத்தினில் வைப்பவர்கள் பெறக்கூடிய பல்வேறு குணங்களைப் பட்டியல் இடுகிறார். பின்னர் 'காலைப் பிடித்தேன் கணபதி' என அவரது காலைப் பிடித்துக்கொண்டு, 'எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி' என சில வரங்களை விருத்தத்தில் கேட்கிறார். உரிமையோடு வரங்களைக் கேட்டுவிட்டால் மட்டும் போதுமா? நமது கடமைகளைச் செய்யவேண்டாமா என நினைத்து,

'கடமை யாவன தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்
.........
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்;
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே'

நமது கடமைகள் எவை எவை என பட்டியலிட்டு விளக்குகிறார். அதிலும் கடமையில் எது முதன்மையானது, முக்கியமானது என்பதை அடுத்து வரும் வரியிலேயே விளக்கி,

'தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான ஆளுந் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய்'

என அசையா நெஞ்சம் அருள வேண்டிக்கொள்கிறார்.



கடமையில் தலையாய கடமை தன்னைக் கட்டுதல். அதாவது, பிறரை அடக்கியாள முற்படாமல் தம்மைத் தாமே அடக்கியாள முற்படுதல். அடுத்தது பிறர் துயர் தீர்த்தல். அதற்கடுத்தது பிறர் நலம் வேண்டுதல். அதன் பின்னரே அவரவர்களுக்கு விருப்பமான உலகைக் காக்கக்கூடிய இறைவனை வேண்டுதல் என கடமைகளை அழகுற எடுத்துரைக்கிறார். கடமைகள் இவைதான் என தெளிவுபடுத்திவிட்டாலும்கூட அதன்படி நடக்க இயலாமல் மனம் போன போக்கில் சில சமயம் நடந்துகொண்டு விடுகிறோம். விளக்கத்தைப் பெற்ற பின்னரும், சில சமயங்களில் மனத்தை அதன் போக்கில் போகவிட்டு விடுவதால் அதற்கு சோர்வு வந்துவிடுகிறது. இவ்விதச் சோர்வைச் சரி செய்ய மனத்திற்கு,

'யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்
வாழ்ந்திட விரும்பினேன்...
மனமே! எனை நீ வாழ்வித் திடுவாய்!
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே!'


என நான்காவது கடமையை நயம்பட நவில்கிறார். மேலும் இவ்விதம் சரணடைந்தால் அந்த இறையானது நம்மை எப்படியெல்லாம் காத்தருளும் என்பதை,

'நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் துணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து,
மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப்
பகைமையொன் றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்'

என்ற வரிகளின் மூலம் உறுதிபடக் கூறுகிறார். பின்னர் இக்கடவுள் எத்தன்மையானவர் என்பதை,

'ஏழையர்க்கெல்லாம் இரங்கும் பிள்ளை,
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே'

என மணக்குள விநாயகரை மனத்தில் இருத்தி வர்ணிக்கிறார். மேலும் 'எது இறை?' என்ற விஷயத்தில் ஒவ்வொருவரும் அவரவர்கள் பெற்ற விளக்கத்தின் அடிப்படையில் பலவிதக் கருத்துகளோடு வாடுகின்றனர். தெய்வம் ஒன்றுதான் என அறிந்திருந்தும் முறையாக நடக்காமல் மூடத்தனமாக, 'என் தெய்வம்தான் உயர்ந்தது' என்றெல்லாம் கூறி மனம் போன போக்கில் நடந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பாரதியார் இறை எது என்பதை,

`ஆதிமூலமே! அனைத்தையும் காக்கும்
தேவ தேவா! சிவனே! கண்ணா!
வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
இருளா! சூரியா! இந்துவே! சக்தியே!
வாணி காளி மாமக ளேயோ!
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே!
வேதச் சுடரே! மெய்யாங் கடவுளே!
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்;
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே!'


விவரிக்கிறார். தெய்வங்கள் பலப்பலவாக இருந்தாலும் இறை ஒன்றுதான் என்பதை மேற்கண்ட வரிகளின் மூலம் சுட்டிக்காட்டுவதுடன், வாழ்க்கைக்கு எது தேவை என்பதை இப்பாடல்வரிகளில் பட்டியலிடுவதுடன், அனைத்தையும் தந்தருள்வது உனது கடமை என இறைவனிடம் கட்டளையிடுகிறார். மேலும்,

'மேன்மைப்படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடி முன்விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே,
பயத்தால் ஏதும் பயனில்லை'

என்கிறார். தன் மனத்திடம் ஆன்மாவான கணபதியின் அருள் இருக்கும்போது நீ ஏன் அச்சப்படுகிறாய்? எனக் கேட்கிறார். அச்சத்தை விட்டொழித்து ஆனைமுகனின் பெயரைக் களிப்போடு கூறி அவரைத் தஞ்சமடைந்து ஒருவர் நேர்மையுடன் வாழ்ந்து வருவாரானால்,

'அச்சமில்லை அமுங்குத லில்லை
நடுங்குத லில்லை நாணுத லில்லை
பாவ மில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோ ம்;
அண்டஞ் சிதறினால் அஞ்சமாட்டோ ம்;
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்'

எனத் துணிவுடன் இருக்கலாம் எனக் கூறுபவர் பக்தியின் மற்றும் பக்தனின் லட்சணம் என்ன என்பதையும்

'பக்தி யுடையார் காரியத்திற் பதறார்!
எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றோ பூமி யாள்வார்;
யாவும் நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறி, அதில் சிவநிலை பெறலாம்'

மேற்கண்ட வரிகளில் தெளிவுபடுத்துகிறார். என்னதான் உனைச் சரணடைந்தாலும் உனக்கே என் ஆவியையும் உள்ளத்தையும் அர்ப்பணித்தாலும் அவ்வப்போது ஏற்படும் துன்பங்களும் சோதனையும் வாழ்வில் விரக்தியை ஏற்படுத்தி மனத்தைக் கவலைக்குள்ளாக்கி சோர்வடையச் செய்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் நீதான் என்னைக் காக்க வேண்டும் என்று பலவாறாக அந்த இறையிடம் நமக்காக முறையிடுகிறார்:

'மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
பாவி நெஞ்சே!

'தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும் 'நமக்கென்' என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்;

'வாழ்க புதுவை மணக் குளத்து
வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக!
தொலையா (இன்பம் விளைந்திடுக!)
வீழ்க! கலியின் வலியெல்லாம்!

'கவலைப் படுதலே கடுநரகு அம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே'

இவ்வாறெல்லாம் நமக்காகப் பாடும் பாரதியார் தவம் எது என்பதையும்,

'செய்க தவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு'

என்ற வரிகளின் மூலம் கோடிட்டுக் காட்டுகிறார். 'அன்பிற் சிறந்த தவமில்லை' என தவத்தைப் பற்றி எளிமையாக அழகாக எடுத்துரைத்த மகாகவி, அடுத்து நம்மை அமர நிலைக்கு அழைத்துச் செல்ல உதவுவது எது என்பதையும் விநாயகர் நான்மணி மாலையின் இறுதியில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்:

'பக்தி வாழி! பலப்பலகாலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர்
பதங்களாம் கண்டீர் பாரிடை மக்களே!'

மனத்தின் மாயைகளுக்கு ஒருவர் அகப்படாமல் அதிலிருந்து மீள வேண்டுமெனில், தன்னைக் கட்டுவதுடன் பிறர் துயர் தீர்த்தலும், பிறர் நலம் வேண்டுதல் போன்ற கடமைகளையும் தன் வாழ்வாகக் கொள்ளவேண்டும். அத்துடன் உலகெல்லாங் காக்கும் ஒருவனாகிய இறையைப் போற்றுவதையும் முக்கியக் கடமையாகக் கொள்வதுடன் அன்பெனும் நல்ல குணத்தையும் கடைப்பிடித்து வருதல் வேண்டும் என்பதையே பாரதியார் விநாயகர் நான்மணி மாலையின் முலம் நமக்கு உ(இ)றுதியாகக் கூறுகிறார்.